
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (21ம் தேதி) இரவு திடீரென நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்துப் பேசினார். போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டில் நடந்த இந்தச் சந்திப்பி சுமார் 20 நிமிடங்கள்வரை சீமானும் ரஜினியும் உரையாடினர். இதில் அரசியல் பற்றியும் சினிமா பற்றியும் பேசியதாகத் தகவல்கள் வெளியாகின.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருக்கும் சூழலில் அவரை முதலில் ஆதரித்து வந்த சீமான், விஜய் தனது கட்சியின் கொள்கைகளை அறிவித்தபிறகு அவரைக் கடுமையாக எதிர்த்து வருகிறார். முன்னதாக அரசியல் வருகையை அறிவித்துவிட்டு பிறகு உடல் நிலையின் காரணமாக அரசியலில் ஈடுபடப்போவதில்லையென ரஜினி அறிவித்திருந்தார். இந்நிலையில், சீமான் – ரஜினி சந்திப்பு பெரும் பேசுபொருளாக மாறியது.
இந்நிலையில், இன்று செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம், ‘ரஜினியுடனான சந்திப்பில் என்ன பேசினீர்கள்’ எனக் கேள்வி எழுப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், “நாங்கள் என்ன பேசினோம் என்று இங்குச் சொல்வது என்றால், உங்கள் முன்பாகவே அந்தச் சந்திப்பை நிகழ்த்திப் பேசிவிடலாமே. தனியாக எதற்குப் பேச வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய சீமான், “நானும் நடிகர் ரஜினியும் சந்தித்து மூலம் நாங்கள் இருவரும் சங்கி என்றால், அனைத்து நிகழ்ச்சிகளிலும் ரஜினியை அழைத்து அருகில் அமரவைத்துக்கொள்ளும் நீங்கள் என்ன?”என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கூறியது சீமான், “அன்பின் காரணமாக மரியாதை நிமித்தமான சந்திப்பு. அப்போது அரசியல், திரைப்படம் உள்ளிட்ட விஷயங்களைப் பற்றிப் பேசினோம்” என்று தெரிவித்தார்.


