Sani Peyarchi 2025: 30 ஆண்டுகளுக்குப் பின் மீனத்திற்கு இடப்பெயர்ச்சியாகும் சனி.. ஏழரை யாருக்கு?

Advertisements

Sani Peyarchi Palangal 2025: சனிபகவான் திருக்கணிதப்பஞ்சாங்கப்படி நிகழும் மங்களகரமான குரோதி ஆண்டு 2025 ஆம் வருடம் மார்ச் மாதம் 29ஆம் தேதி கும்பம் ராசியிலிருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி
அடையப்போகிறார். இந்தச் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடியப்போகிறது. யாருக்கு ஏழரை சனி தொடங்கப்போகிறது. சனியின் பிடியில் சிக்கியுள்ள ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.

சனி பெயர்ச்சி 2025:
நவகிரகங்களில் சனி என்றாலே எல்லோருக்கும் பயம்தான். காரணம் சனிபகவான் கொடுக்கும் சங்கடங்கள் அப்படிப்பட்டது. நல்லவர்களுக்கு அவரே அள்ளியும் கொடுப்பார். அவர் நீதிமான் என்பதால் ஆணவக்காரர்களின் தலையில் தட்டி அமர வைத்து விடுவார். எனவேதான் நாம் நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்தால் எதை நினைத்தும் பயப்பட தேவையில்லை. தசாபுத்திகளும் சரியாக இருந்தால் கிரகங்களின் கோச்சார ரீதியான சஞ்சாரமும் யாரையும் பாதிக்காது.

ஏழரை சனி யாருக்கு:
2025ஆம் ஆண்டு நிகழப்போகும் சனிப்பெயர்ச்சியால் கும்பம், மீனம், மேஷம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். ஏழரை ஆண்டு காலமாகச் சனியின் பிடியில் சிக்கியிருந்த மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிகிறது. அதே நேரத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது. குரு பகவானின் வீடான மீன ராசியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அமரப்போகும் சனி பகவான் மூன்றாம் பார்வையாக ரிஷப ராசியையும், ஏழாம் பார்வையாகக் கன்னி ராசியையும், 10ஆம் பார்வையாகத் தனுசு ராசியையும் பார்வையிடுகிறார். சனியின் சஞ்சாரம், பார்வையால் கும்பம், மீனம், மேஷம் ராசிக்காரர்களுக்கு மிகச்சிறந்த படிப்பினையை கற்றுத்தரப்போகிறார் சனி பகவான்.

மேஷம்:
2025ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி முதல் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது. எந்த வேலையைத் தொடங்கும் போதும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முதலீடு செய்வது நல்லது. இதுநாள் வரை லாப சனியாக இருந்து நிறைய வருமானத்தைக் கொடுத்திருப்பார். 2025ஆம் ஆண்டு முதல் விரைய சனியாக மாறுகிறார். சம்பாதித்த பணத்தை செலவுப் பண்ணும் காலம். சுப விரையத்திற்கு செலவு செய்வது நல்லது. பாசிட்டிவ் எண்ணங்களை வளர்த்துக்கொள்வது நல்லது. பொறுமையும் நிதானமும் தேவை. சுய ஜாதகத்தில் சனி நன்றாக இருந்தால் தசா புத்தி நன்றாக இருந்தால் இந்தச் சனி பெயர்ச்சி வளர்ச்சியைத் தந்து உங்களைக் காப்பாற்றுவார். விரைய சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறைய திருக்கொள்ளிக்காடு ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயத்தில் தலத்தில் சனிபகவான் பொங்கு சனீஸ்வரராகக் காட்சி தருகிறார் குடும்பத்தோடு சென்று தரிசனம் செய்யச் சகல செல்வங்களும் கிடைக்கும்.

மகரம்:

கடந்த 2018ஆம் ஆண்டு முதலே ஏழரை ஆண்டுகாலமாகச் சனிபகவானின் பிடியிலிருந்து அல்லல்பட்டு துயரப்பட்டு வந்திருப்பீர்கள். இனி 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சங்கடங்கள் தீரும் காலம் வந்து விட்டது. இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி இனி லாபங்களைத் தருவார். புதிய வேலை கிடைக்கும் வருமானம் பெருகும். பிரிந்து போன குடும்ப உறவுகள் ஒன்று சேர்வார்கள். பணப்பற்றாக்குறை தீரும்.தொழிலில் வளர்ச்சி ஏற்படும். கடன் கொடுத்து விட்டு ஏமாந்தவர்களுக்கு பணம் வீடு தேடி வரும் சனியால் ஏற்பட்ட விடுதலையை சந்தோஷமாக அனுபவியுங்கள் திருநாள்ளாறு போய் நள தீர்த்த குளத்தில் நீராடிச் சனி பகவானுக்கு நன்றி சொல்லி விட்டு வாருங்கள்.

கும்பம்:
2025ஆம் ஆண்டு மார்ச் முதலே ஜென்ம சனி விலகப்போகிறது. உங்க தலையில் அமர்ந்திருந்த சனி ராசியை விட்டு விலகப்போகிறார். பாதசனி என்பதால் இரண்டரை வருடத்தை எளிதாகக் கடந்து விடலாம். உங்கள் ராசிநாதன் சனிபகவான் உங்களை விட்டு விலகும் காலத்தில் இரண்டரை ஆண்டுக் காலம் நிறைய அள்ளித்தரப்போகிறார். நஷ்டங்களைச் சந்தித்த நீங்கள் இனி லாபத்தை சந்திப்பீர்கள். ஏழரை சனி இரண்டரை வருஷம் நிம்மதி தருவார். வேலையில் இடம் மாற்றம் ஏற்படும். விசா கிடைக்கும். தொழில் வருமானம் அதிகரிக்கும். சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள் தீர வாலாஜாபேட்டையில் ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரரை தரிசனம் செய்யலாம் பாதிப்புகள் குறையும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இரண்டரை ஆண்டுக் காலம் ஜென்மசனி காலமாகும். மன உளைச்சல் அதிகரிக்கும். பயணங்களில் எச்சரிக்கை தேவை. 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் உங்கள் ராசியில் வந்து அமரப்போகிறார். உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம். புதிய தொழில் தொடங்குவீர்கள். அதே நேரத்தில் அதிக கடன் வாங்கி பெரிய அளவில் முதலீடு செய்து அகலக்கால் வைக்காதீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அரசு தொடர்பான ஆதரவு கிடைக்கும். குச்சனூருக்கு குடும்பத்துடன் சென்று சனிபகவானை வழிபட்டு வரப் பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *