
சேலத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட லாரி உரிமையாளர், அதற்கு முன் தனது சாவுக்கு மாமியாரும் சகலையும் காரணம் என்று வீடியோவில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அஸ்தம்பட்டி நடராஜபுரத்தைத் சேர்ந்தவர் சிவக்குமார். அவர் மனைவி கோடீஸ்வரி. லாரி வைத்துத் தொழில் நடத்தி வரும் இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
ஏற்கெனவே கணவன் மனைவியிடையே தகராறு இருந்து வந்த நிலையில், கோடீஸ்வரி அவரின் தாய் வீட்டுக்குச் சென்று விட்டார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த சிவக்குமார் நஞ்சருந்தித் தன்னுயிரை மாய்த்துக்கொண்டார். கணவனின் இறுதிச் சடங்குக்கு வர அவர் மனைவி கோடீஸ்வரி மறுத்துவிட்டார்.
இந்நிலையில் சிவக்குமார் சாகுமுன் தனது வாட்ஸ் அப்பில் அனுப்பிய வீடியோ இப்போது வெளியாகி உள்ளது. அதில் தனது முடிவுக்கு மாமியார் இலட்சுமியும், சகலை ரவியும் தான் காரணம் என்றும் அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வீடியோவுடன் சிவக்குமாரின் பெற்றோர் அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.



