Salem:செல்லாத ரூ.500, ரூ.1,000 வைத்திருந்தவர் கைது: ரூ.1 கோடி மதிப்பு நோட்டுகள் பறிமுதல்!

Advertisements

சேலம்: சேலத்தில் பணமதிப்பிழப்பின்போது செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட 500,1000 ரூபாய் நோட்டுகளை பதித்து வைத்திருந்த நபரைப் போலீசார் கைது செய்தனர். அந்த நபரிடமிருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான செல்லாத நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலத்தைச் சேர்ந்த சபீர் பாலாஜி கோகுலநாதன் உள்ளிட்டோர் கூட்டாகச் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பின்போது இவர்கள்வசம் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு ஆயிரம் ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளன. இதனைத் தான் மாற்றிக் கொடுப்பதாகச் சபீர் தனது பங்குதாரர்களிடம் கூறி செல்லாத நோட்டுகளை வாங்கியதாகத் தெரிகிறது. ஆனால் ஆண்டுகள் பல கடந்தும் ரூபாய் நோட்டுகளை சபீர் மாற்றிக் கொடுக்கவில்லை.

இதனிடையே பணத்தை கொடுத்தவர்களில் பாலாஜி என்பவர் உயிரிழந்து விட்டார். பல ஆண்டுகளாகியும் பணத்தை திருப்பிக் கொடுக்காதது குறித்து சபீரிடம் கோகுலநாதன் கேட்டுள்ளார். அப்போது பணம் தன்னிடம் அப்படியே இருப்பதாகவும் இதனை மாற்றுவதற்காக முயற்சி செய்த வகையில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளதாகவும் அந்தப் பணத்தை கொடுத்துவிட்டு ரூபாய் நோட்டுக்களை எடுத்துச் செல்லுமாறும் கூறியதாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கோகுலநாதன் சபீர் மாசி நாயக்கன் பட்டியில் உள்ள அவரது வீட்டில் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட பொருட்களைப் பதுக்கி வைத்திருப்பதாக அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் பேரில் சோதனை மேற்கொண்ட போலீசார் சபீரின் வீட்டிலிருந்து ஒரு கோடி ரூபாய் செல்லாத 1000 ரூபாய் 500 ரூபாய் தாள்களைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ரூபாய் நோட்டுக்களை பதுக்கி வைத்திருந்த சபீரைரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *