Sale of Fake Alcohol: டாஸ்மாக் பார்களில் போலி மதுபானம் விற்பனை கண்டுபிடிப்பு!

தஞ்சாவூர் மாவட்டம், பெருமகளூர் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள டாஸ்மாக் பார்களில் போலி மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக, மத்திய மண்டல நுண்ணறிவுப் பிரிவு டி.எஸ்.பி., காசிவிஸ்வநாதனுக்கு தகவல் கிடைத்தது.

இன்ஸ்பெக்டர் ராமன், பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமலாகப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயா ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார், சில நாட்களுக்கு முன் விசாரணையில் இறங்கினர். அப்போது, பெருமகளூரில் உள்ள பெட்டி கடை ஒன்றில், சோடா பாட்டில்களுடன் போலி மதுபானங்களை இறக்கி கொண்டிருந்த, வாகன டிரைவரான பாலமுருகன், 37, என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

அவரது தகவலின்படி, பெருமகளூரை சேர்ந்த ராஜ்குமார், 48, என்பவர், புதுக்கோட்டை மாவட்டம், அமரசிம்மேந்திரபுரம் சங்கர், 49, மச்சுவாடி மாரிமுத்து, 48, ஆகியோர் மதுபானங்களை தயாரித்து புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் பல பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்களில் வினியோகம் செய்வதாகத் தெரிவித்தார்.

பிறகு, அவர்கள் இருவரையும் நுண்ணறிவு போலீசார் கைது செய்தனர். மாரிமுத்து மீது ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.மதுபானம் தயாரிப்பதற்கான இயந்திரம், 624 மதுபானம் பாட்டில்கள், 850 லிட்டர் ஸ்பீரிட், 3,250 காலி பாட்டில், 6,000 போலி ஸ்டிக்கர் மற்றும் வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த மதுவிலக்கு போலீசார், மாரிமுத்து, சங்கர், ராஜ்குமார், பாலமுருகன் ஆகிய நான்கு பேரையும்  சிறையில் அடைத்தனர்.

டாஸ்மாக் மூடியபிறகு, இரவு 10:00 மணிக்கு மேல், மறுநாள் காலை 11:00 மணி வரையிலும், பார்களில் கட்டிங் கேட்டு வரும் நபர்களிடம் இந்தப் போலி மதுபானங்களை பார் உரிமையாளர்கள் விற்பனை செய்வதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *