
5 ஆண்டுகளாகக் காய்கனிகளை மட்டும் சாப்பிட்ட ரஷியாவை சேர்ந்த ‘வீஹன்’ பெண் ஹனா சம்சனோவா உயிரிழந்தார்…
மாஸ்கோ : ரஷியாவை சேர்ந்த பெண் ஹனா சம்சனோவா (வயது 39). இவர் பச்சை காய்கனிகளை மட்டும் சாப்பிட்டு வந்தார். ‘வீஹன்’ (பச்சை காய்கனிகளை சாப்பிடும் நபர்) பிரபலமான இவர் கடந்த 5 ஆண்டுகளாகப் பழங்கள், காய்களை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்ந்தார். பழங்கள், காய்களை ஜூசாகவும் குடித்துள்ளார். உலகின் பல நாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் ஹனா சம்சனோவா அங்குக் கிடைக்கும் காய்கனிகளை உண்பது மற்றும் அதன் பலன்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.
காய்கள், பழங்கள், பயிறு, இலை போன்ற இயற்கை உணவுகளைச் சமைக்காமல் பச்சையாக அவர் சாப்பிட்டு வந்தார். இதனிடையே, ஹனா சம்சனோவா கடந்த சில மாதங்களாகத் தனது உணவு பழக்க முறையில் மேலும் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தார். இதன் காரணமாக அவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. உடல் மெலிந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஹனா சம்சனோவா கடந்த 21-ம் தேதி உயிரிழந்தார். பட்டினி மற்றும் சோர்வு காரணமாக ஹனா சம்சனோவா உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Zhanna Samsonova | Diet | Vegan | Raw Vegetables | Malaysia | Russian
அதேவேளை, பச்சை காய்கனிகளை தொடர்ச்சியாகச் சாப்பிட்டதால் உடல் ஒத்துழைக்காமல் தொற்று ஏற்பட்டு ஹனா உயிரிழந்திருக்கலாமென அவரது தாயார் தெரிவித்துள்ளார். உயிரிழந்த தனது மகளின் உடலை ரஷியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளும்படி ஹனாவின் தாயார் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, உயிரிழப்பிற்கு சில நாட்களுக்கு முன்பு ஹனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தாய்லாந்து பழ சீசனுக்காக ஆர்வமாக உள்ளேன். உடல் எடையை அதிகரிக்க நேரம் வந்துவிட்டது’ எனத் தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளாகக் காய்கனிகளை மட்டும் சாப்பிட்டு வந்த ‘வீஹன்’ பெண் பிரபலம் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

