RTO Inspector Bribe: போக்குவரத்து பெண் இன்ஸ்பெக்டர் காரில் கட்டு கட்டாகப் பணம்!

Advertisements

செங்கோட்டை: தமிழ்நாடு – கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் பணி முடித்துச் சென்ற போக்குவரத்து பெண் இன்ஸ்பெக்டர் காரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.2.76 லட்சம் பறிமுதல் செய்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம், தமிழ்நாடு – கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது புளியரை மோட்டார் வாகன சோதனை சாவடி.

இந்தச் சோதனைச் சாவடியில் லாரி டிரைவர்களிடம் லஞ்சம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி பால் சுதர் தலைமையிலான குழுவினர் நேற்று அதிகாலை முதல் புளியரை மோட்டார் வாகன சோதனைச்சாவடி அருகே மப்டியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இங்கு நேற்று முன்தினம் இரவுப் பணிக்கு வந்த மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் பிரேமா ஞானகுமாரி, பணிகளை முடித்துக் கொண்டு நேற்று காலை 8.30 மணிக்குக் கணவரான ஷாட்சனுடன் வீட்டிற்கு காரில் புறப்பட்டுச் சென்றார். செங்கோட்டை அடுத்த தவணைவிலக்கு அருகே அந்தக் காரைத் தடுத்து நிறுத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதில் இன்ஸ்பெக்டர் பிரேமா ஞானகுமாரி கொண்டு சென்ற பேக்கில் கட்டுக்கட்டாக ரூ.2 லட்சத்து 76 ஆயிரத்து 400 பணம் இருந்தது கண்டுபிடித்தனர். விசாரணையில், அந்தப் பணம் கனரக லாரி ஓட்டுநர்கள், சரக்கு வாகன ஓட்டுநர்கள் எனப் பல்வேறு நபர்களிடம் லஞ்சமாக வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து வழக்குப் பதிந்து பிரேமா ஞானகுமாரியை கைது  செய்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *