தமிழக ஆம்னிப் பேருந்துகளுக்குக் கேரள, கர்நாடக அரசுகள் அபராதம் விதித்துப் பறிமுதல்.!

Advertisements

தமிழக ஆம்னிப் பேருந்துகளுக்குக் கேரள, கர்நாடக அரசுகள் அபராதம் விதிப்பதும், பேருந்துகளைப் பறிமுதல் செய்வதும் பற்றிப் பேசித் தீர்க்கும்படி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும், அண்ணாமலையும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள அறிக்கையில், தமிழக ஆம்னிப் பேருந்துகளுக்கு அண்டை மாநில அரசுகள் அபராதம் விதிப்பதால் அவர்களது தொழில் நலிவடையும் நிலையில் உள்ளதாகக் கூறியுள்ளார்.

கடந்த ஒரு வாரக் காலமாக ஆம்னிப் பேருந்துகளை வெளிமாநிலங்களுக்கு இயக்காததால் தமிழகப் பயணிகள் பிற மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்ள இயலவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசின் போக்குவரத்துத்துறை ஆம்னிப் பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசிச் சுமூகத் தீர்வு காண வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள கர்நாடக மாநிலங்களில், தமிழகப் பதிவெண் கொண்ட 100 ஆம்னிப் பேருந்துகளைச் சிறைபிடித்து, 2 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அளவிலான அனுமதிச் சீட்டு பெற்றுள்ள வாகனங்கள், குறித்த காலம் வரை, எந்த மாநிலங்களுக்கும் செல்லலாம் என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம், திமுக அரசு தனது பேராசை காரணமாகப் பிற மாநில வாகனங்களுக்குக் கூடுதல் சாலை வரி விதிக்கத் தொடங்கியதுதான் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உடனடியாகக் கேரள, கர்நாடக மாநில அரசுகளோடு பேச்சு நடத்தி, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *