
தில்லிக் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முசமில், அடில், உமர், சகீன் ஆகியோர் 20 இலட்ச ரூபாய் திரட்டி வெடிபொருள் தயாரிக்கச் செலவிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இது உமரால் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் என்பது மரபணுச் சோதனை மூலம் உறுதியாகியுள்ளது.
தில்லி செங்கோட்டை அருகே காரில் குண்டுவெடித்ததில் 12 பேர் உயிரிழந்தனர். இருபதுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். உமரால் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுவெடிப்புத் தொடர்பான இந்த வழக்கைத் தேசியப் புலனாய்வு முகமையினர் விசாரித்து வருகின்றனர்.குண்டுவெடிப்புக்கு முன்பே அரியானாவின் பரீதாபாத்தில் உள்ள அல் பலா மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வந்த முசமில், அடில் ஆகியோரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களின் வீடுகளில் சோதனையிட்டு டைரி உள்ளிட்ட பல ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் முசமில், அடில், உமர், சகீன் ஆகியோர் சேர்ந்து 20 இலட்ச ரூபாயைத் திரட்டியதாகவும், இந்தத் தொகையை உமரிடம் ஒப்படைத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்கள் வெடிகுண்டு செய்வதற்காக அரியானாவின் குருகிராமம், நூ சுற்றுவட்டாரப் பகுதிகளில் 20 குவிண்டால் என்பிகே உரங்களை 3 இலட்ச ரூபாய்க்கு வாங்கியுள்ளதும் புலனாய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக உமருக்கும் முசமிலுக்கும் இடையே பணத் தகராறு இருந்துள்ளதும், உமர் சிக்னல் செயலியில் நான்கு உறுப்பினர்களைச் சேர்த்துள்ளதும் புலனாய்வில் தெரியவந்துள்ளது.
குண்டுவெடிப்புக்குப் பின் காரின் ஸ்டீயரிங் வட்டுக்கும் ஆக்சிலரேட்டருக்கும் இடையில் சிக்கியிருந்த சிதைந்த காலில் எடுக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரி, உமரின் தாயிடம் எடுத்த டிஎன்ஏ மாதிரியுடன் ஒத்திருந்ததாகத் தில்லிக் காவல்துறையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். இதன்மூலம் இந்தக் கார் குண்டுவெடிப்பு உமரால் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகள் எட்டுப் பேர் மேலும் நான்கு இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தத் திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் நான்கு நகரங்களுக்கு இரண்டு இரண்டு பேராகப் பிரிந்து செல்லத் திட்டமிட்டதாகவும், அந்த நகரங்களில் பல இடங்களில் குண்டுவெடிப்பை நிகழ்த்தத் திட்டமிட்டதாகவும் புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது.


