ரோகித் ஷர்மாவிற்கு ஆண் குழந்தை – குவியும் வாழ்த்துகள்!

Advertisements

மும்பை:

இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா – மனைவி ரித்திகா சஜ்தே தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மும்பையில் உள்ள மருத்துவமனையில் ரித்திகாவிற்கு ஆண் குழந்தை பிறந்திருப்பது தெரிய வந்துள்ளது. ரோகித் ஷர்மாவுக்கு ஆண் குழந்தை பிறந்த நேரம்குறித்த தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இந்த ஜோடி விரைவில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் எனச் சொல்லப்படுகிறது.

இந்தத் தம்பதியினருக்கு 2015ஆம் ஆண்டுத் திருமணம் முடிவடைந்த நிலையில், இவர்களுக்கு ஏற்கனவே 2018ம் ஆண்டு பெண்குழந்தை பிறந்தது. தற்போது இவர்கள் ஆண் குழந்தைக்குப் பெற்றோராகி உள்ளனர். இவர்களின் மகள் சமைரா டிசம்பர் 30 ஆம் தேதி ஆறு வயதை எட்டவுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் நவம்பர் 22-ம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது. ஆனால் இதுவரை இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்கவில்லை. தனது மனைவியை அருகிலிருந்து கவனித்துக்கொள்ளவே அவர் ஆஸ்திரேலியா செல்லவில்லையெனச் சொல்லப்பட்டது.

ஆஸ்திரேலியா புறப்படுவதற்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பின்போது, ​​இந்திய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்,“ ரோகித் பங்கேற்காதது குறித்து தற்போதைக்கு எந்த உறுதிப்படுத்தலும் இல்லை. அவர் வருவார் என்று நம்புகிறேன். நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம்” என்று கூறினார்.

ரோகித் ஒருவேளை பங்கேற்காவிட்டால், துணை கேப்டனும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளருமான ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாகச் செயல்படுவார் என்றும் தலைமை பயிற்சியாளர் கம்பீர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *