Sankarankoil: இறந்தவரின் உடலை எடுக்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

Advertisements

சங்கரன்கோவில் அருகே சுடுகாட்டிற்கு பாதை இல்லாததால் இறந்தவரின் உடலை எடுக்க மறுத்து உறவினர்கள் போராட்டம் – பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினரிடம் நீதிமன்ற உத்தரவு வந்த பின்னர் உடலை எடுப்பதாக கிராம மக்கள் கூறியதால் பரபரப்பு.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஈச்சம்பொட்டல் புதூர் கிராமத்தில் இரு வேறு பிரிவினர் வசித்து வருகின்றனர். அதில் ஒரு பிரிவினர் பயன்படுத்தும் சுடுகாட்டிற்கு செல்லும் பாதை கடந்த சில ஆண்டுகளாக அடைத்து விவசாயத்திற்கு பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை உள்ள ஆக்கிரப்புகளை அகற்றி பாதை அமைத்து தரவேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் கடந்த 22.8.2022 ஆம் ஆண்டு தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அந்த மனு குறித்து உரிய நடவடிக்கை இல்லாததால் இது தொடர்பாக ஒரு பிரிவினர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர் அது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஈச்சம் பொட்டல்புதூரைச் சேர்ந்த சின்னச்சாமி என்பவர் நேற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் அவரது உடலை எடுத்துச் செல்ல பாதை வேண்டும் என்பதால் சுடுகாட்டிற்கு செல்லும் பாதை தொடர்பான வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க அவர்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அந்த வழக்கு நாளை நீதிமன்றத்திற்கு வரவிருக்கிறது.

இதனிடையே பாதை இல்லாததால் சின்னச்சாமியின் உடலை எடுக்காமல் கிராம மக்கள் வைத்திருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து வட்டாட்சியர் மற்றும் போலீசார் ஈச்சம் புட்டல் புதூர் கிராமத்திற்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது நீதிமன்ற உத்தரவு வந்ததும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.இதன் பின்னர் அவர்கள் சமாதானம் அடைந்தனர். இருப்பினும் நாளை நீதிமன்ற உத்தரவுக்கு பிறகே அவர்கள் சின்னச்சாமியின் உடலை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஈச்சம்பொட்டல் புதூர் கிராமத்தில் ஒரு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *