RB Udhayakumar: பா.ஜனதா கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை!

Advertisements

RB Udhayakumar: பா.ஜனதா தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை என்பது அவர்கள் கட்சியைப் பொறுத்த விவகாரம். எனவே அ.தி.மு.க. நிலைப்பாட்டில் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லையென முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை:அ.தி.மு.க. பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிசாமி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள், விருப்ப மனுவினை 1-ந்தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவரும், அம்மா பேரவைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கழக அம்மா பேரவை சார்பில், எடப்பாடி பழனிசாமி பெயரில் விருப்ப மனுவைத் தாக்கல் செய்ய மதுரையிலிருந்து சென்னைக்கு ரெயிலில் புறப்பட்டுச் சென்றார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா வளர்த்த அ.தி.மு.க. இயக்கத்தைப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெற்றிப் பாதையில் நடத்தி வருகிறார். இன்றைக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இரண்டு கோடி தொண்டர்கள் விருப்ப மனுவைப் பெற்றுக்கொண்டு வருகிறார்கள்.

40 தொகுதிகளில் தனித்தொகுதியைத் தவிர, அனைத்து தொகுதிகளிலும் எடப்பாடியார் போட்டியிட வேண்டும் என்று அம்மா பேரவை தொண்டர்கள் விரும்புகிறார்கள். அதனைத் தொடர்ந்து எடப்பாடியார் பெயரில் சென்னை தலைமைக் கழகத்தில் அம்மா பேரவை சார்பில் எடப்பாடியார் போட்டியிட விருப்ப மனுவை நாளைத் தாக்கல் செய்ய நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

பிரதமர் மோடி பல்லடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் புரட்சித்தலைவரையும், அம்மாவையும் புகழ்ந்து பேசி உள்ளார். இந்த இயக்கத்தைப் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தோற்றுவித்தார். இதனைத் தொடர்ந்து 32 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சியிலிருந்து மக்களுக்குப் பல்வேறு சாதனை திட்டங்களைத் தந்தது.

குறிப்பாகக் கறவை மாடுகள், ஆடுகள் திட்டம், மக்களின் வாழ்வாதார திட்டத்திற்காகத் தொலைநோக்கு திட்டங்கள், பசி பட்டினி இல்லாத வண்ணம் 20 கிலோ அரிசி உள்பட இது போன்ற திட்டங்கள்மூலம் அனைவரின் பாராட்டை அம்மா அரசு பெற்றது. அ.தி.மு.க. ஆட்சியை யாரும் குறை கூற முடியாது. அதற்குத் தான் பாரத பிரதமர் புகழாரமாகச் சான்று அளித்துள்ளார்.

அந்தச் சான்று இன்றைக்கு புரட்சித்தலைவர், அம்மாவின் மறுவடிவமாக உள்ள எடப்பாடியாரையே சாரும். அதுமட்டுமல்ல 17 மருத்துவக்கல்லூரிகள், 2,000 அம்மா மினி கிளினிக், 69 சதவீத இட ஒதுக்கீடு, அரசுப் பள்ளி மாணவருக்கு மருத்துவ படிப்பிற்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு இது போன்ற திட்டங்களை யாரும் மறக்க முடியாது.

இன்றைக்கு 2 கோடி தொண்டர்கள், 8 கோடி தமிழக மக்களின் நன்மதிப்பை எடப்பாடியார் பெற்றுள்ளார். தமிழகம் முழுவதும் 68,520 வாக்கு சாவடிகளில் அ.தி.மு.க.வின் வலுவான கட்டமைப்பு உள்ளது. சாமானிய மக்களின் இயக்கமாக அ.தி.மு.க. உள்ளது. கூட்டணிகுறித்து எடப்பாடியார் அ.தி.மு.க. நிலைப்பாட்டை மன உறுதியுடன் பலமுறை எடுத்துச் சொல்லி விட்டார்.

மதுரையில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநாட்டில் கூடத் தெளிவாகக் கூறியுள்ளார். பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்பது தான் அ.தி.மு.க. நிலைப்பாடு. ஆனால் பா.ஜனதா தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை என்பது அவர்கள் கட்சியைப் பொறுத்த விவகாரம். எனவே அ.தி.மு.க. நிலைப்பாட்டில் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

இந்தப் பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. முடிவைத் தெள்ளத்தெளிவாக எடப்பாடி யார் கூறிவிட்டார். இன்றைக்கு மூன்றாம் பெரிய கட்சியாக அ.தி.மு.க. உள்ளது. மக்களைக் காக்கும் பணியில் எடப்பாடியார் மன உறுதியுடன் உள்ளார். மத்திய அரசு, மாநில அரசை எதிர்த்து நின்று 100 சதவீத வெற்றி பெறுவார். இதுதான் அ.தி.மு.க. நிலைப்பாடு, இதில் நாங்கள் உறுதியாகப் பயணம் செய்வோம்.

இன்றைக்கு அ.தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட அனைவரும் விருப்ப மனு தாக்கல் செய்து வருகிறார்கள். தகுதியுள்ள வேட்பாளர்களைத் தேர்வு செய்து தலைமை கழகம் அறிவிக்கும். அவர்களை வெற்றி பெறச் செய்ய நாங்கள் பாடுபடுவோம். பாராளுமன்றத்தில் முல்லைப் பெரியாறு, காவிரி குறித்து தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் பேசவில்லை. தமிழகத்தின் உரிமையைக் காக்க தி.மு.க. கூட்டணியில் உள்ள 38 பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்கவில்லை. வரும் காலத்தில் அவர்களுக்குச் சரியான தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள். அ.தி.மு.க. மாபெரும் வெற்றியைப் பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *