ரவீந்தர் சந்திரசேகருக்கு நிபந்தனை ஜாமீன்.
ரூ.16 கோடி மோசடி வழக்கில் கைதான சின்னத்திரை நடிகை மகாலஷ்மியின் கணவர் ரவீந்தர் சந்திரசேகருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
லிப்ரா ப்ரொடெக்சன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ரவீந்தர் சந்திரசேகர் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து பிரபலமானார். திருமணத்திற்கு பிறகு இருவரது புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. மனைவியுடன் வீடியோக்களை இணையதளத்தில் பகிர்ந்த ரவீந்தர் சந்திரசேகர் தனது மனைவி தான் அழகியென வர்ணித்து எழுதி இருந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் ரவீந்திரனுக்கு எதிராகப் பாலாஜி கபா என்பவர் பண மோசடி புகார் ஒன்றை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் அளித்தார். அதில், நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தைத் தான் ஆரம்பிக்க உள்ளதாகவும், அதற்காக ரூ.200 கோடி செலவாகும் என்றும், அதில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்றும் கூறி தன்னிடமிருந்து ரூ. 16 கோடி பணம் பெற்றதாகக் கூறியுள்ளார். ஆனால், போலி ஆவணங்களைக் காட்டி ரவீந்தர் பணம் பெற்றதாகக் கூறியுள்ள பாலாஜி, திடக்கழிவு திட்டத்தை ஆரம்பிக்காததால் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். ரவீந்தர் தரப்பில் பணம் தராததால் அவர்மீது மோசடி புகார் கொடுத்துள்ளார்.

இதனால் ரவீந்தர் சந்திரசேகருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த 7ம் தேதி அவரைக் கைது செய்தனர். தற்போது, புழல் சிறையில் இருக்கும் ரவீந்தர் ஜாமீன் கேட்டுச் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் அனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ரவீந்தர் பாலாஜியிடமிருந்து ரூ.16 கோடி வாங்கியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது எனப் போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
இதனால், ரவீந்தர் வங்கி கணக்கு பண பரிவத்தனை தொடர்பாக முழு விசாரணை நடத்த உத்தரவிட்ட நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. மேலும், ஜாமீன் வழங்க நிபந்தனையாக இரண்டு வாரங்களில் 5 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

