கண்ணிமைக்கும் நேரத்தில் வேட்டையாடும் புலியைப் போன்று சீறிப்பாயும் பெண், கணவன் இறந்து விட்டால் உடன் கட்டை ஏற வேண்டும் என மடமையை தகர்த்தெறிந்து கணவனைக் கொன்றவர்களை பழி தீர்த்து அரசாண்ட வீர மங்கையென வரலாறுகளில் ரத்தச் சரித்திரம் படைத்தவர் தான் வேலுநாச்சியார்.
”புணரி நீராடி முளரி
தோல் தொடுத்து
களரி வதம் புரிய வந்தாளோ
வளரி படை யாவும்
சிதறி ஓடிச் செய்தாளோ”
என்ற வரிகளுக்குப் பொருந்தும் அளவுக்குத் தமிழகம் கண்டெடுத்த புரட்சிப்பெண், போர்க்களத்தில் எதிரிகளின் ரத்தத்தை ஆறாக ஓட விட்ட வீரம், கணவனைக் கொன்றதற்காக ஆங்கிலேய அரசையே எதிர்த்து நின்ற துணிச்சல், மக்களைக் காக்க ஒவ்வொரு அடியாக வைத்த விவேகம் என இவரது வாழ்க்கை புது சரித்திரத்தையே படைத்துள்ளது.
மன துணிச்சலுக்கு இவருக்கு நிகர் யாருமில்லை என்ற அளவுக்கு, 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களை ஆண்களுக்கு நிகராக எதிர்த்து நின்று அவர்களை ஓடவிட்ட துணிச்சலான முதல் பெண் என இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ராணி வேலு நாச்சியார் என்றாலே வீரமும், அவரது கைகளில் இருக்கும் கூறிய வாளுமே நினைவுக்கு வரும். ராம்நாதபுரத்தில் உள்ள சக்கந்தி என்ற ஊரில் செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி என்ற மன்னருக்கு மகளாகப் பிறந்தார். பெண் பிள்ளை என்றாலும், ஆண் வாரிசு போலவே வேலுநாச்சியார் வளர்க்கப்பட்டார். சிறுவயதிலேயே ஆயுதப்பயிற்சி, வாள்வீச்சு, கத்தி வீச்சு, ஈட்டி எறிதல், குதிரை ஏறுதல் உள்ளிட்டவற்றை கற்றறிந்தார். தமிழ் மட்டுமில்லாமல் ஆங்கிலம், உருது என 7 மொழிகளைப் பயின்று ஏழு மொழிகளிலும் சரளமாகப் பேசும் சகலகலா பெண்ணாக இருந்தார்.

முத்துவடுகநாத தேவர் தனது ஆட்சியை ஆங்கிலேயர்களுக்குக் கீழ் நடத்த விரும்பவில்லை. ஆற்காடு நவாபிற்கும் கப்பம் கட்டுவதை மறுத்தார். இதனால், ஆங்கிலேயர்களும், நவாபும் வடுகநாதனை கொலை செய்யத் திட்டமிட்டனர். அதன்படி, தக்க சமயமும் வந்தது. வடுகநாதர் இறைவழிப்பாடு சென்ற நேரம் பார்த்து அவரை ஆயுதங்களுடன் சுற்றி வளைத்த ஆங்கிலேய படை கோரமாக அவரைக் கொன்றது. கணவன் மரணம் செய்தி அறிந்து வேதனை அடைந்த வேலுநாச்சியார் கணவர் இறைவழிப்பாடு செய்யச் சென்ற காளையர் கோயிலை நோக்கிக் குதிரையில் சென்றார்.கோயில் பகுதியில் வெட்டுப்பட்டும் குண்டடிகளாலும் இறந்து கிடந்த கணவனைப் பார்த்த வேலுநாச்சியார் கடும் துயரம் அடைந்தார்.

திண்டுக்கல்லில் இருந்த ஐதர் அலியை படை வீரன் போல் வேடமணிந்து சென்று பார்த்த வேலுநாச்சியார், அவருக்கு அதிர்ச்சியை அளித்தார். வேலு நாச்சியாரின் துணிச்சலை பார்த்த ஐதர் அலி அவரது பிரச்சனையைக் கேட்கத் தொடங்கினார். மன்னரிடம் மிகச் சரளமாக உருது மொழியில் தனக்கு நடந்த கொடுமைகளை விளக்கிக் கூறினார். மேலும் தனது நாட்டிற்கு ஐதர் அலியின் உதவி வேண்டும் என்பதையும் கேட்டார். வேலுநாச்சியாரின் புத்திக்கூர்மை, வீரம், ஆங்கிலேயர்களுக்கு எதிரான கோபத்தை பார்த்த ஐதர் அலி அவருக்கு உதவ முன் வந்தார்.பின்னர் திண்டுக்கல்லில் தங்கி போருக்கான படைகளைத் திரட்டத் தயாரானார்.

தொடர்ந்து 1780ம் ஆண்டு ஜூன் மாதம் திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை அரண்மனையைக் கைப்பற்ற வேலுநாச்சியாரின் படை புறப்பட்டது. அதில், ஐதர் அலி தான் வாக்களித்தப்படி 5000 குதிரை வீரர்களையும், 5000 போர் வீரர்களையும் அனுப்பி வைத்தார். மருது சகோதரர்களின் ஆதரவுடன் புறப்பட்ட இந்த மாபெரும்படை சோழவந்தான், திருப்புவன, முத்தனேந்தல் நகரங்களை வென்று கடைசியாக மானாமதுரையை வென்றது. 50வது வயது தனது கணவனைக் கொலை செய்த ஜோசப் ஸ்மித்தை தோற்கடித்து, தனது கணவன் படுகொலைக்கான சபதத்தை நிறைவேற்றினார்.
சிவகங்கை கோட்டையில் பறந்த ஆங்கிலேயர் கொடி இறக்கப்பட்டு வேலுநாச்சியாரின் கொடி ஏற்றப்பட்டது.கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி செய்தபோது இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களை எதிர்த்த முதன் பெண் போராளியாக இருந்தார் வேலுநாச்சியார். வடக்கே ஜான்சி ராணி தோன்றிய ஒரு நூற்றாண்டு முன்பே தோன்றி ஆங்கிலேயர்களைக் காட்டு சிங்கமென வேட்டையாடினார் வேலுநாச்சியார். கணவன் இறந்தால் அழுது தனது வாழ்க்கையை அழித்துக் கொள்ளாமல், அவனது மரணத்திற்கு பழி தீர்ப்பேன் எனச் சபதம் எடுத்து, வீரத்தாலும், துணிச்சலாலும் தன்னை விடப் பல மடங்கு ஆயுதத்தாலும், படையாலும் பலமிக்க ஆங்கிலேயர்களை எதிர்த்து வெற்றி பெற்ற வேலுநாச்சியார் பெண்கள்குறித்த வரலாற்றை மாற்றி எழுதியவர். அவரின் துணிச்சல், விடாமுயற்சி, வீரம், மன உறுதி ஒவ்வொரு பெண்ணிற்கும் அவசியமானது.
