
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்களுக்குப் பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. அதில் நடிகர் அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அஜித்தின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
இந்நிலையில், பத்மபூஷன் விருது பெற உள்ள அஜித்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது. படப்பிடிப்பு பணிகளை முடித்துவிட்டு தாய்லாந்திலிருந்து நடிகர் ரஜினிகாந்த் விமானம்மூலம் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்.
அப்போது ரஜினிகாந்திடம், நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது எனச் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, வாழ்த்துகள் எனத் தெரிவித்தார். மேலும் ரசிகருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
நடிகர் அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ நடித்துள்ளார். இப்படத்தில் ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகிற 6-ந்தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அஜித்தின் நடிப்பில் ‘குட் பேட் அக்லி’ படமும் வெளியாக உள்ளது. இதனிடையே, பைக், கார் ரேசில் ஆர்வம் கொண்ட அஜித் வெளிநாட்டில் நடைபெற்றும் வரும் ரேசிங் பங்கேற்றுள்ளார். இதில் கார் ரேசிங்கில் அவரது அணி மூன்றாவது இடத்தை பிடித்தது.
