
நீட் தேர்வுப் பயிற்சி பெற்றுவந்த மாணவன் விடுதி அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டா: ராஜஸ்தானின் கோட்டா நகருக்கு ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள், என்ஜினீயரிங் மற்றும் மருத்துவ நுழைவு தேர்வுகளுக்குத் தயாராவதற்காக வருகை தருகின்றனர். நீட் தேர்வு மையங்களில் சேர்ந்து படித்து வருகின்றனர்.
எனினும், அவர்களில் பலர் படித்து வரும்போதே தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நடந்து வருகிறது. படிப்பிற்கான அழுத்தம் மற்றும் மாணவர்களிடையே தோல்விபற்றிய பயம் ஆகியவையே இதற்குக் காரணம் எனப் பலரும் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், மேற்கு வங்காளத்திலிருந்து ராஜஸ்தானுக்கு நீட் தேர்வுப் பயிற்சி பெறுவதற்காகப் போரித் என்ற மாணவர் சென்றுள்ளார். அவர் கோட்டா நகரில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்து படித்து வந்திருக்கிறார். அவர் விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கியுள்ளார்.
இந்த நிலையில், நேற்று மாலை அவருடைய அறையில் தூக்கு போட்டபடி காணப்பட்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த, சக மாணவர்கள் மற்றவர்களின் உதவியுடன் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அதில் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டாரென மருத்துவர்கள் கூறி விட்டனர்.
கடைசியாக 4 மணியளவில் அவரை மற்ற மாணவர்கள் பார்த்துள்ளனர். இதன்பின் 7 மணிக்குப் பின்பும் அவர் அறையை விட்டு வெளியே வராத சூழலில், சந்தேகத்தின் பேரில் அறைக்குச் சென்று பார்த்தபோது, இந்த விசயம் தெரிய வந்தது.தற்கொலை குறிப்பு எதுவும் கைப்பற்றப்படவில்லை. இந்த ஆண்டில் இது 26-வது சம்பவம் ஆகும். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

