Rajasthan Byelection Result: பாஜக அமைச்சரை அலறவிட்ட காங்கிரஸ்!

Advertisements

கரன்பூர் இடைத்தேர்தலில் பாஜக அமைச்சர் சுரேந்தர் பால் சிங்கை, காங்கிரஸ் வேட்பாளர் ருபிந்தர் சிங் கூனர் தோற்கடித்துள்ளார்.

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி ஒரே கட்டமாகச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்தது. மொத்தம் 200 தொகுதிகளைக் கொண்ட மாநிலத்தில், கரன்பூர் தொகுதி வேட்பாளர் குர்மீத் சிங் கூனரின் மறைவை அடுத்து 199 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதில் பதிவான வாக்குகள் கடந்த டிசம்பர் மாதம் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதில், அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசை வீழ்த்திப் பாஜக அமோக வெற்றி பெற்றது. பாஜக 115 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 69 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பாஜக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து, அம்மாநில முதல்-மந்திரியாக பஜன்லால் ஷர்மா பொறுப்பேற்றார்.

இந்த நிலையில், நவம்பர் 25ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறாத கரன்பூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் ருபிந்தர் சிங் கூனரும், பாஜக சார்பில் அமைச்சர் சுரேந்தர் பால் சிங்கும் களம் கண்டனர்.

காங்கிரஸ் வேட்பாளர் ருபிந்தர் சிங் கூனர், முன்னாள் எம்.எல்.ஏ. குர்மீத் சிங் கூனரின் மகன் ஆவார். குர்மீத் சிங் கூனரின் மறைவையடுத்தே, கரன்பூர் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு கடந்த 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில், 81.38 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, கரன்பூர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பதிவான வாக்குகளில் ருபிந்தர் சிங் கூனருக்கு 94,950 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக அமைச்சர் சுரேந்தர் பால் சிங்கிற்கு 83,667 வாக்குகளும் கிடைத்துள்ளன. இதன் மூலம் 11,283 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக அமைச்சர் சுரேந்தர் பால் சிங்கை, காங்கிரஸ் வேட்பாளர் ருபிந்தர் சிங் கூனர் தோற்கடித்துள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்ற ருபிந்தர் சிங் கூனருக்கு முன்னாள் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *