இந்துஸ்தான் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி மீது திருட்டுப் பட்டம் சுமத்தியதால் உயிரிழப்பு..!

Advertisements

கோவையில் இந்துஸ்தான் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி மீது திருட்டுப் பட்டம் சுமத்தியதால் அவர் மாடியில் இருந்து கீழே குதித்துத் உயிரிழந்ததாக  கூறப்படுகிறது. கோவை, பீளமேடு அருகே உள்ள பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் முந்நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தக் கல்லூரியில் திருவண்ணாமலையைச் சேர்ந்த வானதி என்பவரின் மகள் அனுப்பிரியா விடுதியில் தங்கி இருந்து முதலாம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று முதலாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ – மாணவிகளுக்கு அங்குள்ள மருத்துவமனையில் பயிற்சி நடந்து கொண்டு இருந்தது. மதியம் அனைவரும் உணவருந்தச் சென்றபோது, மாணவ – மாணவியர் உடைமைகளைப் பயிற்சி நடந்த வகுப்பறையில் வைத்து விட்டுச் சென்றுள்ளனர். அப்போது நான்காம் ஆண்டு படிக்கும் மாணவியின் பையில் இருந்த 1500 ரூபாய் களவு போனது.

இதுகுறித்து அவர் பேராசிரியர்களிடம் கூறி உள்ளார். அப்போது அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பார்த்தபோது மாணவி அனுப்பிரியா தனியாக அந்த அறையை விட்டு வெளியே வருவது தெரிய வந்தது. இதனால் பணத்தை அவர் எடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அனுப்பிரியாவைக் கல்லூரி முதல்வரும் பேராசிரியரும் விசாரித்து உள்ளனர். மாணவி அனுப்பிரியா தான் அந்தப் பணத்தை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். மற்ற மாணவ – மாணவிகள் வகுப்புகள் முடிந்து விடுதிகளுக்கும், வீடுகளுக்கும் சென்ற நிலையில் அனுப்பிரியாவை அவர்கள் விடவில்லை எனக் கூறப்படுகிறது.

மாலை ஆறரை மணி அளவில் அனுப்பிரியாவை ஐந்தாவது மாடியில் இருந்து வீட்டுக்குச் செல்லும்படி கூறி அனுப்பி உள்ளனர். இதனால் சோகத்துடன் அவமானம் அடைந்து வெளியேறிய அனுப்பிரியா நான்காவது தளத்திற்கு வந்தவுடன் திடீரென்று அங்கு இருந்து கீழே குதித்ததாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் நிகழ்விடத்திலேயே  உயிரிழந்தார். மாணவி மீது திருட்டுப் பட்டம் சுமத்தியதால் அவர் அவமானம் அடைந்து தற்கொலை செய்த தகவல் சக மாணவ – மாணவிகளுக்குப் பரவியது. அவர்கள் கல்லூரியை  முற்றுகையிட்டுப் பேராசிரியர்களை வெளியில் செல்ல விடாமல் தடுத்தனர்.

மாணவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் கல்லூரிக் கட்டடத்தின் கண்ணாடி உடைந்தது. அதன் பிறகு மாணவி அனுப்பிரியா உடல் கூறாய்க்குக் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதற்கு இடையே அனுப்பிரியா தற்கொலை செய்த தகவல் திருவண்ணாமலையில் உள்ள அவரின் தாய்க்குத் தெரிவிக்கப்பட்டது. தன் கணவன் ஏற்கெனவே இறந்துபோன நிலையில் ஒரே மகளான அனுப்பிரியா இறந்ததைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் வானதி உறவினர்களுடன் கோவைக்கு விரைந்து வந்தார். மகளின் உடலைப் பார்த்துக் கதறி அழுதார். இது குறித்துக் கோவை பீளமேடு காவல் நிலையத்தில் வானதி புகார் செய்தார். அனுப்பிரியாவுடன் படித்த மாணவ – மாணவிகள் கோவை அரசு மருத்துவமனை முன்பும் கல்லூரி முன்பும் குவிந்திருந்ததால் அங்குப் பாதுகாப்புக்குக் காவல்படையினர் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *