
தில்லியில் அறவழியில் போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு உள்துறை மந்திரி அமித்ஷா பொறுப்பெற்று பதவி விலக வேண்டும் என மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தில்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியது தொடர்பாக மத்திய அரசை மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனியார் ஆங்கில நாளேட்டில் அவர் எழுதிய கட்டுரையில் மாணவர்களின் குரலை ஒடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.
ஆணிகள் பதிக்கப்பட்ட லத்திகளால் மாணவர்கள் தாக்கப்பட்டனர் என்றும் ரப்பர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டது என்றும் குற்றம் சாட்டினார். இந்த சம்பவத்திற்கு உள்துறை மந்திரி அமித்ஷா பொறுப்பெற்று பதவி விலக வேண்டும் என்று தெரிவித்தார். பிரதமர் மோடியின் இமேஜ் அழிந்துவிட்டது என்று கூறினார்.
தங்களது நடவடிக்கைகளுக்கான விளைவுகளில் இருந்து பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா அல்லது எந்த அதிகாரியும் தப்பிக்க இந்திய இளைஞர்கள் அனுமதிக்க மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்..



