
சீக்கியர்கள்குறித்த தனது பேச்சுகுறித்து பா.ஜ.க. பொய்களைப் பரப்பி வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுடெல்லி:காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சமீபத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது இந்தியாவில் உள்ள சீக்கியர்கள்குறித்து அவர் பேசிய கருத்துகளுக்குப் பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், தனது பேச்சுகுறித்து பா.ஜ.க. பொய்களைப் பரப்பி வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வழக்கம்போல் பா.ஜ.க. பொய்களைக் கையில் எடுத்துள்ளது. அவர்களால் உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாததால் என்னை அமைதியாக்க நினைக்கிறார்கள். ஆனால் வேற்றுமையில் ஒற்றுமை, சமத்துவம் மற்றும் அன்பு ஆகிய இந்தியாவின் அடிப்படை பண்புகளுக்காக எப்போதும் குரல் கொடுப்பேன்.
அமெரிக்காவில் நான் கூறிய கருத்துகுறித்து பா.ஜ.க. பொய்களைப் பரப்பி வருகிறது. இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள ஒவ்வொரு சீக்கிய சகோதர, சகோதரிகளையும் நான் கேட்க விரும்புகிறேன், நான் கூறியதில் ஏதேனும் தவறு இருக்கிறதா? ஒவ்வொரு சீக்கியரும், ஒவ்வொரு இந்தியரும், அச்சமின்றி தங்கள் மதத்தைச் சுதந்திரமாகப் பின்பற்றும் நாடாக இந்தியா இருக்க வேண்டாமா?” என்று பதிவிட்டுள்ளார்.


