
புதுச்சேரியில் வரும் 10ஆம் தேதி அதிமுக சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலத்திற்கு இதுநாள் வரையிலும் மாநில அந்தஸ்து வழங்காதது, மத்திய நிதிக் குழுவில் புதுச்சேரி மாநிலத்தை இணைக்காதது, மத்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்குரிய இடஒதுக்கீடு வழங்காதது, ரேஷன் கடைகளைத் திறக்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய – மாநில அரசுகளைக் கண்டித்து, புதுச்சேரியில் அதிமுக மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகிற 10-ஆம் தேதி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், எம்.பி தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் திரளாகக் கலந்துகொள்வது குறித்தும், பேரணியை சிறப்படைய செய்வது சம்பந்தமாகப் புதுச்சேரி மாநில செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் தலைமையில் இன்று தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பிற அணி நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், தொகுதி நிர்வாகிகள் மற்றும் வார்டு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புதுச்சேரி மாநில அம்மா பேரவை செயலாளர் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் , மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான ராஜாராமன் உட்பட நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.


