
புதுச்சேரியில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சேவல் சண்டை பந்தயம் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று சண்டைக்கோழி வளர்ப்பவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் பாரம்பரிய விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை, சிலம்பம், மற்றும் கிடா சண்டை ஆகவே பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது.
தமிழர்களின் இந்த விளையாட்டுகள் இன்றளவும் அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்லும் வகையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.
ஆனால் இந்த நான்கு விளையாட்டுக்களமே புதுச்சேரியில் நடத்தப்படவில்லை மேலும் சேவல் சண்டை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தும் புதுச்சேரியில் சேவல் சண்டை பந்தயம் நடத்த அரசு அனுமதி மறுக்கிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சண்டை சேவல் வளர்ப்பவர்களின் ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி கூறும்போது…
சேவல் சண்டை பந்தயம் நாடு முழுவதும் 15 மாநிலங்களிலும் தமிழகத்தின் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலும் நீதிமன்ற உத்தரவுப்படி நடத்தப்பட்டு வருகிறது.
ஆனால் புதுச்சேரியில் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அதிகாரிகளும் அரசும் புதுச்சேரியில் சேவல் சண்டை பந்தயம் நடத்த அனுமதி வழங்க மறுக்கிறது.
சண்டைக்கோழிகளை பார்த்தாலே புதுச்சேரி போலீசார் அதனை பறிமுதல் செய்து தேவையில்லாமல் சண்டைக்கோழி வளர்ப்பவர்கள் மீது வழக்குகளை பதிவு செய்கிறார்கள் இது கண்டனத்திற்குரியது.
சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டம் தங்காநல்லூரில் நடைபெற்ற சேவல் சண்டை பந்தயத்தில் புதுச்சேரியில் இருந்து தனது தலைமையில் 400 பேர் பங்கேற்றதாகவும் 27,28 ஆகிய இரண்டு நாள் நடைபெற்ற இந்த போட்டியில் 100 சேவல்கள் வெற்றி பெற்று பல்வேறு கோப்புகளையும் வென்று புதுச்சேரிக்கு பெருமை சேர்த்ததாக தெரிவித்தார்.
எனவே நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்தில் சேவல் சண்டை பந்தயம் அனுமதிப்பது போன்று புதுச்சேரியிலும் அனுமதிக்க வேண்டும் என்று சின்னத்தம்பி கோரிக்கை விடுத்தார்.
பேட்டியின்போது நிர்வாகிகள் பிரகாஷ், ரமணா, வழக்கறிஞர் திலீப், சௌந்தர், கார்த்தி, கதிர், சுகு, ஆகியோர் உடன் இருந்தனர்.

