Puducherry Child Murder: போலீசார் தடியடி – போர்க்களமான ஆளுநர் மாளிகை!

புதுச்சேரியில் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற இந்தியா கூட்டணி கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரியில் 9 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டம் தெரிவித்து புதுச்சேரி மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியா கூட்டணி கட்சியினர் ராஜா தியேட்டர் சிக்னலிலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கிப் பேரணி சென்றனர். ஆளுநர் மாளிகை அருகே வந்தவர்களைப் போலீசார் தடுப்புகள் அமைத்துத் தடுத்து நிறுத்தினர்.

அப்போது ஆவேசத்தின் உச்சகட்டத்திற்கு சென்ற போராட்டக்காரர்கள், தடுப்பு கட்டைகளைத் தள்ளியும், தடுப்பு கட்டைகளைத் தாண்டியும் ஆளுநர் மாளிகை உள்ளே செல்ல முயன்றனர். இதனால், போலீசாருக்கும், போராட்டக்காரர்களும் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் போலீசார் லத்தியை கொண்டு போராட்டக்காரர்களைத் தாக்க முற்பட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் தாங்கள் கொண்டு வந்த கொடி கட்டைகளைக் கொண்டு பதிலுக்குப் போலீசாரை கடுமையாகத் தாக்கினார். இதனால் ஆளுநர் மாளிகை அருகே போர்க்களம் போலக் காட்சி அளித்தது. தொடர்ந்து ஒரு சிலர் ஆளுநர் மாளிகை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *