Election Bond: நன்கொடை பெற்ற கட்சிகள் விவரம் வெளியிடு!

Advertisements

புதுடில்லி: தேர்தல் பத்திரங்களின் கீழ் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகுறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.

‘அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திரங்கள் முறை செல்லாது’ என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.இந்த வகையில், தேர்தல் பத்திரங்கள் விற்பனை, அவற்றை வாங்கியவர்கள், அவற்றில் எவ்வளவு அரசியல் கட்சிகளால் பணமாக்கப்பட்டன போன்ற விபரங்களைத் தாக்கல் செய்ய, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் எஸ்.பி.ஐ., க்கு உத்தரவிடப்பட்டது.

அவ்வாறு வங்கி அளிக்கும் தகவல்களை, தேர்தல் கமிஷன் தன் இணையதளத்தில் வெளியிடவும் உத்தரவிடப்பட்டது. இதன்படி, அனைத்து தகவல்களையும் தேர்தல் கமிஷனிடம் எஸ்.பி.ஐ., வழங்கியது.

நேற்று இரவு இந்தத் தகவல்களைத் தேர்தல் கமிஷன் தன் இணையதளத்தில் வெளியிட்டது. இரண்டு தொகுப்புகளாக இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 337 பக்கங்களுள்ள முதல் தொகுப்பில், பத்திரங்களை வாங்கிய தனிநபர்கள், நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள், தேதி மற்றும் பத்திரத்தின் மதிப்புடன் வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம், 426 பக்கங்களுள்ள இரண்டாவது தொகுப்பில், எந்தெந்த கட்சிகள், அந்தப் பத்திரங்களைப் பணமாக்கியுள்ளன என்ற விபரம், தேதி மற்றும் பத்திரத்தின் மதிப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. தேதி வாரியாக இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நிறுவனம் மொத்தம் எவ்வளவு வழங்கியுள்ளது, அது எந்தக் கட்சிக்கு வழங்கப்பட்டது போன்ற விபரங்கள் இல்லை. அதுபோல, அரசியல் கட்சிகள் மொத்தமாகப் பெற்றுள்ள நன்கொடை தொடர்பான விபரமும் தொகுக்கப்படவில்லை.

நன்கொடை அளித்த நிறுவனங்கள்:

தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை வழங்கிய நாட்டின் முன்னணி நிறுவனங்கள்:

பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் – 1,368 கோடி ரூபாய்

மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் — 966 கோடி ரூபாய்,

குயிக் சப்ளை செயின் நிறுவனம் – 410 கோடி ரூபாய்,

வேதாந்தா நிறுவனம் – 400 கோடி ரூபாய்,

ஹால்தியா எனர்ஜி – 377 கோடி ரூபாய் வழங்கியுள்ளன.

பார்த்தி குழுமம் – 247 கோடி ரூபாய்,

எஸ்ஸல் மைனிங் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் – 224 கோடி ரூபாய் வழங்கியுள்ளன. பியூச்சர் கேமிங் நிறுவனம் லாட்டரி மார்ட்டினுடையது எனக் கூறப்படுகிறது.

நன்கொடை பெற்ற கட்சிகள்:

பா.ஜ., காங்கிரஸ், அ.தி.மு.க., – – தி.மு.க., ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, திரிணமுல் காங்., – பி.ஆர்.எஸ்., சிவசேனா, தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்., காங்., ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகள் இந்தப் பட்டியலில் உள்ளன.

இதற்கிடையே, ஏ.டி.ஆர்., எனப்படும், ஜனநாயகத்துக்கான சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ள பட்டியலில், 2024 ஜனவரி வரை, மொத்தம், 16,518 கோடி ரூபாய் மதிப்புள்ள, 28,030 தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில்,
பா.ஜ., 6,566 கோடி ரூபாயும்,
காங்கிரஸ் 1,123 கோடி ரூபாயும்,
திரிணமுல் காங்கிரஸ் 1,092 கோடி ரூபாயும் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை பெற்றுள்ளதாக ஏ.டி.ஆர்., அமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *