
PREMAM VS MANJUMMEL BOYS: தமிழ் நாட்டில் சக்கைப்போடு போட்டு வரும் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்து தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழ்நாட்டில் மலையாள படங்களுக்கு மவுசு அதிகரிக்க காரணம் பிரேமம் படம் தான். அப்படம் கேரளாவை போல் தமிழ்நாட்டிலும் சக்கைப்போடு போட்டுத் திரையரங்கில் 175 நாட்கள் ஓடிச் சாதனை படைத்தது. பிரேமம் படத்திற்கு தமிழ் மக்கள் கொடுத்த வரவேற்பால், கேரளாவில் நல்ல வரவேற்பை பெறும் மலையாள படங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் லேட்டஸ்டாக ரிலீஸ் செய்யப்பட்ட திரைப்படம் தான் மஞ்சுமெல் பாய்ஸ்.
சிதம்பரம் என்பவர் இயக்கியுள்ள இப்படம் கடந்த 2006-ம் ஆண்டு கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது. கேரளாவின் மஞ்சுமெல் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தபோது, அதில் ஒருவர் மட்டும் குணா குகையில் சிக்கிக் கொள்கிறார். அவரை எப்படி மீட்டார்கள் என்பது தான் இப்படத்தின் கதை. இப்படம் முழுக்க முழுக்க தமிழ்நாட்டில் நடப்பதால் இதற்கு இங்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அதுமட்டுமின்றி தமிழில் அண்மையில் ரிலீசான படங்கள் எதுவும் பெரிய அளவில் சோபிக்காத நிலையில், மஞ்சுமெல் பாய்ஸ் படம் இங்கு ரிலீஸ் செய்யப்பட்டு சக்கைப்போடு போட்டு வருகிறது. இதனால் இப்படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் வெறும் ரூ.10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்படம் ரிலீஸான ஒரே வாரத்தில் உலகளவில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து உள்ளது.
அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ.3 கோடி வசூலித்துள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த மலையாள படம் என்கிற சாதனையை மஞ்சுமெல் பாய்ஸ் படைத்துள்ளது. இதற்கு முன்னர் வெளிவந்த மலையாள படங்களில் 2018 திரைப்படம் ரூ.2.25 கோடியையும், ஹிரிதயம் ரூ.2.13 கோடி, லூசிபர் ரூ.2.12 கோடியென வசூலித்து இருந்தது. அதேபோல் பிரேமம் படம் 2015-ம் ஆண்டு ரிலீஸ் ஆனபோது ரூ.2 கோடி வசூலித்து இருந்தது. அதுமட்டுமின்றி அண்மையில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டபோதும் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்ததால் அதிக வசூல் செய்த மலையாள படங்கள் பட்டியலில் பிரேமம் முதலிடம் பிடித்திருந்த நிலையில், தற்போது மஞ்சுமெல் பாய்ஸ் அதை முறியடித்திருக்கிறது.

