
விருதுநகரில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம் எனத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
விருதுநகர் மக்களவை தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜயபிரபாகரனுக்கும், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரும் மாறி மாறி முன்னிலையில் வந்தனர். இறுதியில் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் விஜயபிரபாகரன் தோல்வி அடைந்தார். இந்நிலையில், விஜயபிரபாகர் திட்டமிட்டு சூழ்ச்சியால் வீழ்த்தியுள்ளனர் எனப் பிரேமலதா குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில்:
விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். தலைமை தேர்தல் ஆணையத்திற்கு இமெயில் மூலம் புகார் கடிதம் அனுப்பியுள்ளோம்.
விருதுநகரில் விஜயபிரபாகர் தோல்வியடையவில்லை, தோற்கடிக்கப்பட்டுள்ளார். விஜயபிரபாகர் திட்டமிட்டு சூழ்ச்சியால் வீழ்த்தியுள்ளனர். உணவு இடைவேளைக்குப் பின் இரண்டு மணிநேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. விருதுநகர் வாக்கு எண்ணிக்கையில் 13வது சுற்றிலிருந்து முறைகேடு நடைபெற்றுள்ளது. அதற்கான ஆதாரங்கள் எல்லாம் என்னிடம் உள்ளது.
விருதுநகர் தொகுதி முடிவு அறிவிக்கும் முன் 40 தொகுதிகளில் வெற்றியென முதல்வர் கூறியது ஏன்? அதிகாரப்பூர்வ அறிவிப்பும், களத்திலிருந்து வந்த தகவல்களும் முரண்பாடாக இருந்தன. தபால் ஓட்டுகளை நள்ளிரவில் எண்ணியது ஏன்?. விருதுநகர் ஆட்சியருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அவரது போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளது. விருதுநகர் தொகுதியில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் மற்றொரு முறை வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும். அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் வெற்றி உறுதி. அக்கட்சியில் இருப்பது உட்கட்சி பிரச்னை. அதிமுகவில் அனைவரும் ஒன்று சேர்ந்தால் அது வரவேற்கத்தக்கது எனப் பிரேமலதா கூறியுள்ளார்.


