Poonamallee Municipality: நகராட்சி அலட்சியம்.. பாழாகி வரும் நடைபாதை கடைகள்!

Advertisements

பூந்தமல்லி நகராட்சியில் நடைபாதை வியாபாரிகளுக்காக தமிழக அரசு வழங்கிய நடைபாதை கடைகள் வியாபாரிகளுக்கு விநியோகிக்கப்படாமலே நகராட்சி அலுவலகத்திலேயே சேதமடைந்து வருகிறது.

சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் 500 க்கும் மேற்பட்ட சாலையோர உணவகங்கள் செயல்படுகிறது. கொரோனா காலத்திற்கு பின், கடைகளை மீண்டும் நடத்த பலருக்கும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், தற்போது 300 க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் மட்டுமே செயல்படுகிறது.

இது தவிர, பூந்தமல்லி – கலங்கரைவிளக்கம் வரை மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால், தெருவோர வியாபாரிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த நிலையில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள தெருவோர வியாபாரிகளுக்கு கடை வழங்க தமிழக அரசு கடந்த ஆண்டு முடிவெடுத்தது.

அதன்படி, கடந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் பூந்தமல்லி நகராட்சிக்கு 30 கடைகளை ஒதுக்கப்பட்டது. அவை வியாபாரிகளுக்கு இன்னும் வழங்கப்படாமல் ஓராண்டுக்கு மேலாக, மழை, வெயில் பாராமல் நகராட்சி அலுவலகத்தில் வெட்ட வெளியில் வைக்கப்பட்டு துருப்பிடித்து முகப்புகள் உடைந்து பாழாகி வருகிறது.

இது குறித்து கடந்த ஆண்டு அதிகாரிகளிடம் கேட்டபோது, கடைகள் வழங்குவது தொடர்பாக, சரியான நபர்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. அரசியல் தலையீடு இல்லாமல் உரியவர்களை தேர்ந்தெடுப்பது சவாலாக உள்ளதாக தெரிவித்திருந்தனர். ஆனால், கடந்த ஓராண்டாக முன்கள பணிகள் நடந்த நிலையில், பூந்தமல்லி நகராட்சி அதிகாரிகள் இன்று வரை அக்கடைகளை வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், அரசால் வழங்கப்பட்ட நலிந்தோருக்கான நடைபாதை கடைகள் பாழாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனைப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் கடைகளை உரியவர்களிடம் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *