கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மதுக்கடைகளை நடத்த அனுமதிக்கும் அரசாணையைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் எனப் பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சில்லறை மது வணிகத்தை டாஸ்மாக் நிறுவனம் மட்டுமின்றி, கூட்டுறவுச் சங்கங்களும் நடத்தலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது ஆபத்தானது என்று குறிப்பிட்டுள்ளார். கூட்டுறவுச் சங்கங்கள் மதுக்கடைகளைத் திறக்கலாம் என்று தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டிய தேவை என்ன? என்று வினவியுள்ளார்.
இதைச் செயலல்படுத்தினால், சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்துப் பிரிவினரும் இன்னும் அதிக அளவில் மதுவுக்கு அடிமையாவார்கள் என்றும், அப்படியொரு நிலை ஏற்பட அரசே வழிவகுக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மதுக்கடைகளை நடத்த அனுமதிக்கும் அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான கால அட்டவணையை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

