பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் தங்களின் நிலைப்பாட்டை உணர வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில், உறுதியான கோரிக்கைகள் முன்வைத்ததாகத் தெரிவித்துள்ளார். அதில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18 சதவீதத்திலிருந்து குறையக் கூடாது என்று கூறியுள்ளார்.
மேலும் முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் திமுக இன்றும் என்றும் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார். ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் தங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது என்று தெரிவித்துள்ளார்.
பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

