
பதக்கப் பட்டியலில் 5வது இடத்திற்கு இந்தியா முன்னேறியது.
ஹாங்சு: ஆசிய விளையாட்டில் இன்று இந்திய அணி 25 மீ ரேபிட் பிரிவில் தங்கமும், 50 மீ ரைபிள்-3 பிரிவில் வெள்ளியும் இந்திய அணி வென்றது. தனிநபர் 50 மீ., துப்பாக்கி சுடுதலில் சிப்த் கவுர் சாம்ரா தங்கப் பதக்கமும், ஆஷி சவுக்சி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
சீனாவின் ஹாங்சுவில் 19வது ஆசிய விளையாட்டு நடக்கிறது. இதில் நேற்று வரை இந்தியா 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதல், மகளிர் கிரிக்கெட், குதிரையேற்றத்தில் தங்கம் வென்றது.இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் 25 மீ., மகளிர் ரேபிட் பிரிவில் இந்தியாவின் மனு பாகெர், ஈஷா சிங், ரிதம் சங்வான் ஆகியோர் அடங்கிய அணி தங்கப் பதக்கம் வென்று சாதித்துள்ளது.

அதேபோல் 50 மீ., ரைபிள்-3 பிரிவில் ஆஷி சவுக்சி, மானினி கவுஷிக் மற்றும் சிப்த் கவுர் சாம்ரா அடங்கிய இந்திய அணி வெள்ளி வென்றது. தனிநபர் துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைபிள்- 3 பிரிவில் இந்தியாவின் சிப்த் கவுர் சாம்ரா தங்கப் பதக்கமும், ஆஷி சவுக்சி வெண்கலப் பதக்கமும் வென்றனர். தனிநபர் 25 மீ ரைபிள் துப்பாக்கி சுடுதலில் ஈஷா சிங் வெள்ளி வென்றார். தனிநபர் ஸ்கீட் துப்பாக்கி சுடுதல் பிரிவில் ஆனந்த் ஜூட் சிங் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி வென்றார்.
ஆசிய விளையாட்டு போட்டியில், பாய்மரப் படகுப் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்துள்ளது. தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஷ்ணு சரவணன் இந்த வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 22 (5 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம்) ஆனது. பதக்கப் பட்டியலில் 5வது இடத்திற்கு இந்தியா முன்னேறியது.


