
மாலை நேரத்தில் சாப்பிடுவதற்கு ஒரு லைட்டான டிஃபின்; குழிப்பணியாரம். இது கார பணியாரம். இனிப்பு பணியாரம் என இரு வகைப்படும். இதில் மசாலா குழிப்பணியாரம் செய்து சாப்பிடலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு – 1 கப்
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 1
கேரட் (துருவியது) – 1

கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது) – 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை (பொடியாக நறுக்கியது) – 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) – 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
உளுந்து – 1 டீஸ்பூன்

கடுகு – ½ டீஸ்பூன்
சீரகம் – ½ டீஸ்பூன்
பெருங்காயப்பொடி – ¼ டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் 4 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும்.
பின்பு அதில் கடுகு, உளுந்து, சீரகம், கடலை பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு தாளிக்கவும்.
பின்னர் அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் போன்றவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட் துருவல், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.
பின்பு மஞ்சள் தூள், பெருங்காயப்பொடி, உப்பு சேர்த்து கிளறி இறக்கவும். இந்தக் கலவை ஆறியதும் இட்லி மாவுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
அடுப்பில் குழிப்பணியாரக் கல்லை வைத்து சூடானதும், அதன் ஒவ்வொரு குழியிலும் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றவும்.
ஒவ்வொரு குழியிலும் முக்கால் அளவுக்கு மாவை ஊற்றி, இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும். இப்போது சுவையான ‘மசாலா குழிப்பணியாரம்’ தயார்.


