தலையணை அருவியில் குளிக்க தடை!

Advertisements

நெல்லை:

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும், மணிமுத்தாறு வனப்பகுதிகளிலும் கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது.

இன்று அதிகாலை நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது. இன்று காலை வரை அதிகபட்சமாக நெல்லை மாவட்டத்தில் சேர்வலாறு பகுதியில் 35 மில்லி மீட்டரும், பாபநாசம் பகுதியில் 28 மில்லி மீட்டரும், கன்னடியன் பகுதியில் 15.20 மில்லி மீட்டரும் மழை பெய்தது.

இதேபோல் நெல்லை, பாளையங்கோட்டை, மணிமுத்தாறு, களக்காடு, சேரன்மகாதேவி, மூலைக்கரைப்பட்டி, அம்பாசமுத்திரம், நாங்குநேரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 117.05 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 4½ அடி உயர்ந்து 121.72 அடியாக உள்ளது.

இதேபோல் 143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 110 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 1½ உயர்ந்து 111.40 அடியாகக் காணப்படுகிறது.நேற்று 99.92 அடியாகக் காணப்பட்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் இன்று ½ உயர்ந்து 100.45 அடியாக உள்ளது.

பிரதான அணையான பாபநாசத்திற்கு வினாடிக்கு 1517 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையிலிருந்து 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று 600 கனஅடி தண்ணீர் வந்த நிலையில் இன்று கூடுதலாக 900 கணஅடி தண்ணீர் கூடுதலாக வருகிறது.

இதேபோல் மணிமுத்தாறு அணைக்கு 1000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மழை காரணமாகத் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளில் நலன் கருதி கடந்த 5 நாட்களாக மணிமுத்தாறில் குளிக்கத் தடை விதித்கப்பட்டிருந்தது. இன்று 6-வது நாளாக அங்குக் குளிக்க அனுமதிக்கபடவில்லை.

இதேபோல் களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்து தடுப்பணையை மூழ்கடித்த படி தண்ணீர் பாய்ந்து ஓடுவதால் நேற்று தலையணையில் குளிக்கக் களக்காடு வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்று 2-வது நாளாகத் தடை நீடிக்கிறது.

தென்காசி மாவட்டத்திலும் மழை தொடர்ந்து வருகிறது. அதிகப்பட்சமாகப் புளியங்குடியில் 44 மில்லி மீட்டரும், சிவகிரியில் 20 மில்லி மீட்டரும், ராமநதியில் 19 மில்லி மீட்டரும் மழை பாதிவாகி இருந்தது.

இதேபோல் தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி, கடனாநதி, கருப்பாநதி பகுதி, அடவிநயினார் பகுதி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் சூரன்குடியில் 42 மில்லி மீட்டரும், கழுகுமலையில் 28 மில்லி மீட்டரும், வேடநத்தத்தில் 22 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது.

இதேபோல் தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், மணியாச்சி, கயத்தாறு, கடம்பூர், சாத்தான்குளம், திருச்செந்தூர், குலசேகரபட்டினம், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், கீழ அரசரடி, காடல்குடி, வைப்பாறு உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை பெய்தது.

மழை காரணமாகச் சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலை குண்டும், குழியாகக் காணப்படுகிறது. இதில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளுக்கு பள்ளங்கள் தெரியாததால் விபத்தில் சிக்கி வருகிறார்கள்.

நேற்று இந்தச் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற புதுமாப்பிள்ளை ஒருவர் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். உடனடியாக இந்தச் சாலையைச் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *