குடிதண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, ரோடு இல்லை, சுகாதாரம் இல்லை என கண்ணீர் வடிக்கிறார்கள். இது வடமநிலத்தில் அல்ல… தமிழ்நாட்டில்தான்… யார் அவர்கள்… பாவப்பட்ட அந்த மக்களின் சோகத்தைச் சொல்கிறது இந்த செய்தித் தொகுப்பு…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் இருக்கிறது, ஜெ.ஜெ.நகர். இந்த நகரில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பெயருக்குத்தான் வீடுகள். ஆனால் தரை கூட இல்லாத குடிசைகள்தான் இங்கு அதிகம். சின்ன மழை பெய்தாலே போதும், அழையா விருந்தாளியாக மழைநீர் உள்ளே சாடும். கூடவே பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளும் வந்து அச்சுறுத்தும்..
15 ஆண்டுகளுக்கு முன்பு உருவான இந்த ஜே.ஜே.நகரில் சாலை வசதியோ, மின்சார வசதியோ, முக்கியமாக குடிநீர் வசதியோ இதுவரை முறையாகக் கிடைக்கவில்லை என அங்கலாய்க்கிறார்கள் குடியிருப்போர். மீன் பிடித்தல் மற்றும் மீன் விற்பனை தொழிலில் ஈடுபட்டுவரும் அவர்கள், குடி தண்ணீருக்காகப் படும் பாடு சொல்லி மாளாது. ஒரு குடம் தண்ணீர் 8 ரூபாய், ஒரு பேரல் குடிதண்ணீர் 100 ரூபாய் என தண்ணீருக்கே தங்கள் வருமானம் முழுவதையும் செலவிட்டு வருகிறார்கள்..
பஞ்சாயத்தில் சென்று சொன்னாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார்கள் குடியிருப்போர்.
பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குள்தான் ஜெ.ஜெ.நகர் வரும் நிலையில், தொகுதியின் தவெக எம்.எல்.ஏ ஒருமுறையாவது தங்கள் பகுதியைப் பார்வையிட்டு குறைகளைக் களைய வேண்டும் கோரிக்கை வைக்கிறார்கள்..
ஜெ.ஜெ.நகரில் பெயரளவுக்கு தெருவில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் பள்ளத்துக்குள் இருப்பதால், அதில் டியூப்பை போட்டுத்தான் தண்ணீர் பிடிக்கிறார்கள். அந்தப் பள்ளத்திலும் சில நேரங்களில் பாம்பு, நண்டு எனக் கிடந்து கடித்து வைக்கும் அச்சுறுத்தல் உள்ளதாக வேதனை தெரிவிக்கும் குடியிருப்புவாசிகள் அதிமுக, திமுக ஆட்சியில் கிடைக்காத மாற்றம் வரவேண்டும் எனத்தான் தவெகவுக்கு வாக்களித்ததாகவும், ஆனால் எந்த மாற்றமும் வரவில்லையே என எக்கம் தெரிவிக்கிறார்கள்..
அப்படியே திருவள்ளூர் ஆட்சியரும், முதலமைச்சரும் தங்கள் பிரச்சினைகளுக்கு நல்லத் தீர்வை தரவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஜெ.ஜெ.நகரில் நிலவும் சுகாதாரச் சீர்கேட்டினால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து குழந்தைகள், பெரியோர் என பலரும் நோயால் பாதிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இவர்களுக்கு விடிவுகாலம் ஏற்படுத்தி தரவேண்டும்..


