பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி விவகாரத்தில், எம்.எல்.ஏ அருள்விக்னேஷ் கைது செய்யப்பட்டால் 3ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படுவதோடு, அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிடவும் முடியாது. இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் வீட்டுக்கே வந்து மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியர் பத்மஜா அளித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள்விக்னேஷ் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாக,
இது தொடர்பான வழக்கு விசாரணையில் நவம்பர் 24ஆம் தேதி, நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த வழக்கினை விசாரிக்கும் விசாரணை அதிகாரியாக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ருஷ்டி சிங், கண்காணிப்பு அதிகாரியாக ஐஜி காமினி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது பி.என்.எஸ் பிரிவுகள் 75, 78, 79, 132 மற்றும் பிரிவு 4 ஆகிய ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சட்டப் பிரிவு 75 என்பது, பாலியல் நோக்கத்துடன் கூடிய அணுகுமுறைகள், ஆபாசக் கருத்துகளைத் தெரிவிப்பதாகும். சட்டப்பிரிவு 78, தவறான நோக்கத்துடன் ஒருவரைப் பின் தொடர்வதையும், ஆபாச செய்கைகள் செய்வதை சட்டப்பிரிவு 79 குறிக்கிறது. அதேபோல் சட்டப்பிரிவு 132 என்பது, அரசு ஊழியரைக் கடமையைச் செய்ய விடாமல் தடுப்பதாகும்.
பிரிவு 4 என்பது, பணியிடத்தில் பெண்ணைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது, அதாவது பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டப் பிரிவாகும். இதில், பி.என்.எஸ் 75 என்பது ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவாகும். ஏனவே தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது ஜாமினில் வெளியில் வரமுடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அவர் எந்நேரமும் கைது செய்யப்படும் சூழல் நிலவியதால், அவரது வீட்டுக்கு முன்பாக தவெக தொண்டர்கள் கூடினார்கள். காவல்துறையினரும் குவிக்கப்பட்டனர்.
நவம்பர் 24ஆம் தேதி இரவு தனது தொண்டர்கள் துணையோடு இருசக்கரவாகனத்தில் தனது இல்லத்தில் இருந்து வெளியே சென்றுவிடவும் எம்.எல்.ஏ அருள்விக்னேஷ் முயற்சித்ததாகவும் பரபரப்பு கிளம்பியிருக்கிறது. இந்த நிலையில் நவம்பர் 25ஆம் தேதி, இந்த வழக்கில் காவல்நிலைய விசாரணைக்கு ஆஜராகும்படி கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி, எம்.எல்.ஏவின் வீட்டுக்கு நேரில் சென்று அழைப்பாணை வழங்கியுள்ளார். எம்.எல்.ஏ வீட்டில் இல்லை எனக்கூறப்படும் நிலையில் அவர் விசாரணைக்கு வருவாரா என யூகங்கள் கிளம்பியிருக்கும் நிலையில், அவர் வீட்டில்தான் இருப்பதாக சோஷியல் மீடியாக்களில் காணொலி வெளியாகி உள்ளது.
ஒடவும் முடியாது ஒளியவும் முடியாது என்னும் நிலையில் சிக்கியிருக்கும் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் அடுத்து என்ன செய்யலாம் என ஆதரவாளர்களிடம் ஆலோசனை செய்ததாகவும் ஒரு தகவல் உலா வருகிறது. அதில் கைது செய்யப்படுவதற்கு முன்பாக எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விடலாம் என அருள்விக்னேஷ் தெரிவித்தாகவும் சொல்லப்படுகிறது. அதே நேரம் அவரைக் கட்சியில் இருந்து நீக்கவும் தவெக தலைமை முடிவெடுத்திருப்பதாக தவெக வட்டாரத்தில் அலையடிக்கிறது. தவெக எம்.எல்.ஏ அருள்விக்னேஷ் காவல்துறையின் விசாரணைக்குப் பின்னால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டால் அவருக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
அருள்விக்னேஷுக்கு மூன்றாண்டு தண்டனை விதிக்கப்பட்டால், அவர் உடனடியாகத் தேர்தலில் போட்டியிடத் தகுதி நீக்கம் செய்யப்படுவார். சிறைத்தண்டனை முடிந்து விடுதலையான நாளிலிருந்து 6 ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலிலும் போட்டியிட முடியாது..

