நடிகர் விஜய்யை முதன்முறையாக என்டிடிவி பேட்டி எடுத்துள்ளது. இந்த பேட்டியளிப்பதிலும் நடிகர் விஜய் ஒரு புரட்சி செய்துள்ளார். இதில் காமெடி என்னவென்றால் அது ஆஃப் கேமரா பேட்டியாம். உலகில் ஆஃப் கேமராவில் பேட்டி கொடுத்த ஒரே தலைவர் விஜய்தான் என்கிறார்கள். முதல்வர், எதிர்கட்சித்தலைவர்கள் எல்லாம் நேரில் வந்து மக்களோடு, ஆளுமைகள் முன் அமர்ந்து பேட்டி கொடுக்க, இவர் , என்.டி.டி.வி டீமை வீட்டுக்கு வரவழைத்து சத்தமில்லாமல் ஆஃப் கேமரா பேட்டி கொடுத்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற என்.டி.டி.வி நடத்திய மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். ஆனால், நடிகர் விஜய் என்.டி.டி.வி தலைமை ஆசிரியர் ராகுல் கன்வால், நிர்வாக ஆசிரியர் ஷிவ் அரூர் மற்றும் அரசியல் பிரிவு ஆசிரியர் வாசுதா வேணுகோபால் ஆகியோரை வீட்டுக்கு வரவழைத்து பேட்டி அளித்திருக்கிறார்.
தனது பேட்டியின் போது நடிகர் விஜய் கரூர் சம்பவம் குறித்து கூறுகையில், கரூர் சம்பவம் எனக்கு மிகுந்த மன வருத்தத்தை தந்தது. இப்படி நடக்குமென்று ஒரு போதும் நான் நினைக்கவில்லை. மிகுந்த மன வேதனையடைந்ததாக கூறியுள்ளார். அடுத்து, ஊடகங்களுடன் நீங்கள் பேசுவதே இல்லை… இப்போது மட்டும் எங்களுக்கு பேட்டியளிக்க முன்வந்தது ஏன் ? என்கிற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது…
இந்த கேள்விக்கு பதிலளித்த விஜய், ‘அரசியல்தான் எனது எதிர்காலம் . நான் என்ன செய்ய வேண்டுமென்பதில் உறுதியாக நிற்பவன். நான் நிச்சயமற்றவன் இல்லை. நான் எடுக்கும் முடிவில் உறுதியாக நிற்பவன். தேசிய ஊடகங்களுடனான எனது முதல் உரையாடல் இதுதான். இதை ஒரு வகையான ‘மாதிரி நேர்காணல்’ என்றுதான் நான் கூறுவேன். நான் போதுமான அளவு பேசுவதில்லை என்று மக்கள் கருதுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.
ஆனால் , நான் எனது உரைகள் மூலமாகப் பேசுகிறேன். நான் எப்போதும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
நீங்கள் ஒரு கிங்மேக்கரா ? என்ற கேள்வி விஜய்யிடம் முன் வைக்கப்பட்ட போது, கேள்வி கேட்டவரை ஒருவித அதிர்ச்சியுடன் பார்த்துள்ளார் விஜய். பின்னர், அந்த கேள்விக்கு பதில் கூறுகையில், நான் எதிர்காலத்துக்காக போராடுகிறேன், வெற்றி பெறவே போராடுகிறேன். வெற்றி எனக்கு கிடைத்து விடும். அதனால், நான் கிங்மேக்கராக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார்.
அடுத்து, நீங்கள் நேரடியாகப் பதிலளிக்கத் தயங்குகிறீர்கள் அல்லது தன்னம்பிக்கை குறைவாக இருப்பதாக பலரும் கருதுகிறார்கள். அதற்கு உங்கள் பதில் என்ன ? என்ற கேள்வி விஜய்யிடத்தில் முன் வைக்கப்பட்டது. ‘ இது உண்மை என்று நான் நினைக்கவில்லை. உங்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் நான் நிதானமாகவும் தெளிவாகவும் பதிலளித்தேன். நான் ஏன் இங்கு இருக்கிறேன் என்பதில் எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை. நான் ஒரு முடிவெடுத்துவிட்டேன். நான் சினிமாவை விட்டுவிட்டேன். அரசியல்தான் என் எதிர்காலம்” என்று உறதிபட விஜய் மறுத்துள்ளார்.
அரசியலுக்கு வந்தது ஏன் என்ற கேள்விக்கு, கோவிட் காலத்திற்குப் பிறகு நான் அரசியலில் ஈடுபடுவது குறித்து மிகவும் தீவிரமாகச் சிந்தித்து வந்தேன். இது திடீரென எடுத்த முடிவு அல்ல என்று பதிலளித்துள்ளார்.ஜனநாயகன் படத்தை பற்றி விஜய் பேசுகையில், ”எனது அரசியல் வருகையால் ‘ஜன நாயகன்’ திரைப்படம் பாதிக்கப்பட்டுள்ளது. எனது தயாரிப்பாளருக்காக நான் வருத்தப்படுகிறேன். அரசியலுக்குள் வந்துள்ளதால், எனது படங்கள் பாதிக்கப்படலாம் என்பதை நான் எதிர்பார்த்தேன். அதற்காக, மனதளவிலும் தயாராக இருந்தேன் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
அரசியலில் உங்கள் ரோல் மாடலாக யாரை கூறுவீர்கள் என்கிற கேள்விக்கு , எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் எனக்கு பிடித்த தலைவர்கள் என்று விஜய் ஓப்பனாகவே கூறியிருக்கிறார். மொத்தத்தில் நடிகர் விஜய் தனது ரசிகர்களை கட்சி தொண்டர்களாக மாற்றியது வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டது . விஜய் நீண்ட கால அரசியலில் ஈடுபடவே ஆசைப்படுகிறார். இந்த தேர்தலுடன் அவரின் அரசியல் வாழ்க்கை முடிந்து விட போவதில்லை. பல ஆண்டு காலமாக நடிப்புத்துறையில் இருந்துள்ளார்.
நீண்ட காலமாகவே தன்னை அரசியலுக்கும் தயார் செய்து வந்துள்ளார். தங்கள் கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதே, எங்கள் வெற்றிக்கு கடவுள் அனுகிரகம் இருப்பதை காட்டுவதாக நடிகர் விஜய் கருதுவதாகவும் என்.டி.டி.வி முடிவுரையாக எழுதியுள்ளது.


