
பாராளுமன்ற வளாகத்திற்குள் கண்ணீர் புகைக் குண்டுகளுடன் அத்துமீறியது இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: நாடாளுமன்ற மக்களவை இன்று வழக்கம் போல் நடந்து கொண்டிருந்தது. மேற்குவங்க பாஜக எம்.பி. காகென் முர்மு என்பவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த இருவர் அவைக்குள் திடீரென குதித்தனர்.
தொடர்ந்து, அவையில் மையப்பகுதிக்கு செல்ல முயன்ற அவர்கள், தாங்கள் கையில் மறைத்து வைத்திருந்த கண்ணீர் புகை குண்டு போன்ற பொருளை வீசினார். அதில் இருந்து வாயு வெளிப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த எம்.பி.,க்கள் அவர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் தப்பிக்க முயன்று அவைக்குள்ளேயே சிறிது நேரம் ஓடியதுடன், வண்ணப் பொடிகளையும் வீசினர்.
இதையடுத்து அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்த எம்.பி.க்கள், அவைக் காவலர்கள் அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதேபோல், நாடாளுமன்றத்தின் வெளியேயும் இரண்டு பேர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அவர்களையும் போலீசார் கைது செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் 2 ஆண், 2 பெண் என மொத்தம் 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இந்திய பாராளுமன்ற வளாகத்திற்குள் கண்ணீர் புகைக் குண்டுகளுடன் அத்துமீறி இருவர் நுழைந்ததற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2001ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்றதன் நினைவு தினமான இதே நாளில் இத்தகைய சம்பவம் நடந்திருப்பது வேதனைக்குரியது.
இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துவதுடன், இந்திய பாராளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை உடனடியாக வலிமைப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



