ஏப்ரல் 6-ந்தேதி பாம்பன் புதிய ரெயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ஏப்ரல் 6-ந்தேதி தமிழகம் வருகிறார். முன்னதாக, 5-ந்தேதி இலங்கை செல்லும் பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, அங்கிருந்து நேரடியாக பாம்பன் வருகிறார். பின்னர் 6-ந்தேதி பாம்பன் புதிய ரெயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பாம்பன் ரெயில்வே பாலம் திறப்பு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் மற்றும் தமிழக எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா மூத்த தலைவர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரெயில்வே செய்து வருகிறது. இதேபோல், பாம்பன் புதிய பாலம் திறப்புக்கு பின்னர் பிரதமர் மோடி, ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்கிறார். அதன்பிறகு பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொள்கிறார். இதைத் தொடர்ந்து, மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி செல்ல உள்ளதாக பா.ஜனதா நிர்வாகிகள் தெரிவித்தனர்.

