Pakistan Election 2024: ஆட்சி அமைப்பதில் இழுபறி!

Advertisements

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -நவாஸ் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி இடையேயான கூட்டணி பேச்சில் உரிய முடிவு எட்டப்படாததால், தேர்தல் முடிந்து 10 நாட்களுக்கு மேலாகியும் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.

பாகிஸ்தானில் கடந்த 8ம் தேதி பொது தேர்தல் நடந்தது. வன்முறை, இணையதள முடக்கம், ஓட்டுப்பதிவில் முறைகேடு எனப் பல்வேறு பிரச்னைகளுக்கு நடுவே நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் அன்றைய தினமே எண்ணப்பட்டன.

மொத்தம் 265 தொகுதி களுக்கு நடந்த ஓட்டுப்பதிவில், சுயேச்சைகளாகப் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் 93 இடங்களைக் கைப்பற்றினர்.முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி 75 இடங்களைப் பிடித்தது. 54 இடங்களில் பிலாவல் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி வெற்றி பெற்றது.

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியும், பாக்., மக்கள் கட்சியும் சேர்ந்து ஆட்சி அமைக்க முடிவு செய்தன. இதற்கான பேச்சு கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதுவரை இரு தரப்பினரும், மூன்று முறை சந்தித்து பேச்சு நடத்தியபோதும், உரிய முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில், இன்று மீண்டும் பேச்சு நடத்த இரு கட்சிகளும் திட்டமிட்டுள்ளன. பிரதமர் பதவியை விட்டுக் கொடுத்த பாக்., மக்கள் கட்சி, சபாநாயகர் மற்றும் செனட் தலைவர் பதவி கோரி வருகிறது.

அதே சமயம், தாங்கள் ஆளும் மாகாணங்களுக்குக் கூடுதல் நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருவதால், பேச்சில் முடிவு எட்டப்படாமல் உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக இரு கட்சிகளும் வெளியிட்டு உள்ள கூட்டறிக்கையில், ‘இரு தரப்பிலும் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் முழுமையாக விவாதிக்கப்பட்டன.

‘இதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், மேலும் சில விஷயங்கள்குறித்து இறுதி முடிவு எடுக்க ஆலோசனை நடத்த வேண்டி உள்ளது.’இன்றைய கூட்டத்தில் உரிய முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது’ எனத் தெரிவித்துள்ளன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *