பா.ஜனதா போடும் எந்த திட்டமும் இங்கு நிறைவேறாது-அமைச்சர் சேகர்பாபு!
பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் கோவில்கள் முன்பு வைக்கப்பட்டுள்ள கடவுள் நம்பிக்கைக்கு எதிரான கருத்துக்கள் அகற்றப்படும். பெரியார் சிலைகளையும் அகற்றி பொது இடங்களில் அமைப்போம் என்று அண்ணாமலை கூறினார்.
அவரது இந்த கருத்துக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதற்கும் அண்ணாமலை பதிலளித்தார். அவர் கூறும்போது, கடவுளை நம்புபவர்கள்தான் கோவிலுக்கு செல்கிறார்கள். அந்த நம்பிக்கையை இழிவுபடுத்தும் வகையில் கடவுளை நம்புபவன் முட்டாள் என்று கோவில்கள் முன்பு வைத்திருப்பதும், கடவுள் நம்பிக்கை இல்லாத பெரியாரின் சிலையை வைத்திருப்பதும் எந்த வகையில் நியாயம்? அப்படி பார்த்தால் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் பற்றி மிக மோசமாக பெரியார் விமர்சித்துள்ளார்.
அந்த கருத்துக்களை அவரவர் கட்சி அலுவலகங்கள் அருகில் வைத்துக் கொள்வார்களா? என்று கூறினார்.இதற்கு பதிலளித்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-
பெரியாரின் கருத்துக்களையும் விமர்சனங்களையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். பா.ஜனதாவும் அதை விமர்சனமாகவும் கருத்தாகவும் ஏற்க வேண்டியதுதானே.இது கருத்து சுதந்திரம் இருக்கும் மண். திராவிட மண். ஆஸ்திகரும், நாஸ்திகரும் இணைந்து வாழும் மண்.
இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் இங்கு இடமில்லை. மதத்தால், இனத்தால் மக்களை பிளவுபடுத்த பா.ஜனதா முயல்கிறது. அவர்களின் ஆசை கானல் நீர் போன்றது. பா.ஜனதா போடும் எந்த திட்டமும் இங்கு நிறைவேறாது என்றார்.