பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப், தன்னை மீண்டும் அழைக்கும் பிக்பாஸ் டீமுக்கு கண்டிஷன் போட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. இந்த சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில் முதல் வாரம் அனன்யா எலிமினேட் ஆனதை அடுத்து மறுதினமே பவா செல்லதுரை உடல்நலக்குறைவு காரணமாக வெளியேறினார். பின்னர் அடுத்தடுத்த வாரங்களில் விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இதையடுத்து கடந்த வாரம் பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
பிரதீப்பால் பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. பெண் போட்டியாளர்கள் இந்த குற்றச்சாட்டை கேட்ட கமல் இதுகுறித்து பிரதீப் தரப்பு நியாயத்தை கேட்காமல் அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கமல் தன்னுடைய அரசியல் லாபத்திற்காக இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
பிரதீப் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னரும் அவரால் வீட்டில் தினசரி பிரச்சனைகள் வெடித்த வண்ணம் உள்ளன. பிரதீப்பை வெளியேற்றியதற்கு சுமால் பாஸ் வீட்டில் உள்ள விசித்ரா, அர்ச்சனா, தினேஷ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவிக்க, அவர்களை புல்லி கேங் எனப்படும் மாயா, பூர்ணிமா, ஐஷூ, ஜோவிகா ஆகியோர் சேர்ந்து அட்டாக் செய்தது பிரதீப்புக்கான ஆதரவை எகிற வைத்தது. இதனால் மீண்டும் பிரதீப்பை பிக்பாஸ் வீட்டுக்குள் கொண்டு வரும் முடிவில் பிக்பாஸ் டீம் உள்ளதாக கூறப்பட்டு வந்தது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக பிரதீப் தற்போது தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அந்த பதிவில், நீங்கள் என்னை மீண்டும் உள்ளே அனுப்ப முடிவெடுத்தால், எனக்கு எதிராக செயல்பட்ட இருவரை வெளியேற்ற என்னிடம் இரண்டு ரெட் கார்டு கொடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி பிக்பாஸ் வீட்டின் 7-வது வார கேப்டன் ஆகும் பொறுப்பையும் என்னிடம் வழங்க வேண்டும் என பதிவிட்டு, ‘ரொம்ப ஷார்ப் ஆன புள்ளிங்கலால தான் அது முடியும்’ என வட சென்னை பட டயலாக்கையும் குறிப்பிட்டுள்ளார். இதனால் இந்த வாரம் பிரதீப் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.