OPS: அதிமுக கொடி இல்லாத காரில் பயணம்!

Advertisements

அதிமுக கொடியை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு நீதிமன்றம் தடை  உத்தரவிட்ட நிலையில், அதிமுக கொடி இல்லாத காரில் ஓ.பன்னீர் செல்வம் பயணம் செய்தது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியது.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டது. அதிகார போட்டி காரணமாக சசிகலா  மற்றும் டிடிவி தினகரனை கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம், இருவரும் இணைந்து அதிமுகவை தொடர்ந்து வழி நடத்தினர். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இருவருக்கும் இடையே மோதல் உருவானது.

Advertisements

இரட்டை தலைமையால் எந்த வித முடிவும் எடுக்க முடியவில்லையென கூறி ஒற்றை தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் குரல் எழுப்பினர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து தொடர்ந்து நீதிமன்றத்தில் சட்ட போராட்டத்தை மேற்கொண்டார்.

உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என தொடர்ந்த சட்டபோராட்டத்தில் இறுதியாக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதனையடுத்து பொதுச்செயலாளராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி அதிமுகவை வளர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் தொண்டர்களை சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார். அதே நேரத்தில் தான்,தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என கூறி ஓ.பன்னீர் செல்வம் அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேடுகளை பயன்படுத்தி வந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தார். இந்த வழக்கில் ஓபிஎஸ் அதிமுக கொடியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், சொந்த பயணமாக கடந்த வாரம்  ஓ.பன்னீர் செல்வம் சிங்கப்பூர் சென்றிருந்தார். இந்த பயணம் முடிவடைந்து நேற்று இரவு ஓ.பன்னீர் செல்வம் சென்னை திரும்பினார். அவரை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் திரண்டு இருந்தனர். அப்போது ஓபிஎஸ் எப்போதும் பயணிக்கும் கார் வந்தது. அந்த காரில் எந்த நேரமும் இருக்கும் கட்சி கொடியானது அகற்றப்பட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவின் காரணமாகவே கட்சி கொடி  அகற்றப்பட்டதாக தெரிகிறது. 3 முறை முதலமைச்சர், பல முறை அமைச்சர், ஜெயலலிதாவிற்கு அடுத்த நிலையில் இருந்த ஓபிஎஸ் இன்று  கட்சி கொடியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *