போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவிக்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சார்பில் காவல் துறையிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.
இதையடுத்து போராட்ட குழுவினரையும் கிராம மக்களையும் இன்று விஜய் சந்திக்க அனுமதி அளித்த காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.
தனியார் மண்டபத்தில் மட்டுமே மக்களைச் சந்திக்க வேண்டும் என்றும், பிற்பகல் 11.30 மணி முதல் 12.30 மணிவரை மட்டுமே சந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பரந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் போராட்ட குழுவினரை த.வெ.க. தலைவர் விஜய் சந்தித்தார்.
பொடவூரில் உள்ள வீனஸ் திருமண மண்டபத்தில் விவசாயிகளைத் தவெக தலைவர் விஜய் சந்திக்க உள்ளார்.
பரந்தூரில் விஜய் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆவணங்கள் வைத்திருந்த பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மட்டுமே மண்டபத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு வந்த பொதுமக்கள், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களைக் காண்பித்த பிறகே அவர்கள் மண்டபத்துக்குள் செல்லப் போலீசார் அனுமதித்தனர். வெளிநபர்கள் மண்டபத்துக்குள் செல்லப் போலீசார் அனுமதி அளிக்கவில்லை.