
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15-ம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது உள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் அனேக இடங்களில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ‘டானா’ புயலாக உருவாகியுள்ளது. இந்தப் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை ஒடிசாவின் புரி- சாகர் தீவுகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என்பதால், மணிக்கு 110 முதல் 120 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலை எதிர்கொள்ள மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள மேற்கு வங்காள அரசு, அங்கு 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று முதல் 26-ம் தேதிவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


