கட்டாய மதமாற்றம், ஆட்கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் சத்தீஸ்கர் மாநிலத்தில் கைது செய்யப்பட்ட கேரளக் கன்னிமார்கள் இருவரையும் பிணையில் விடுவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பழங்குடி மக்களைக் கட்டாயப்படுத்திக் கிறித்தவ மதத்துக்கு மாற்றியதாகவும், ஆட்களைக் கடத்தியதாகவும் குற்றஞ்சாட்டிச் கேரளத்தைச் சேர்ந்த கன்னிமார்கள் இருவரையும், மற்றொரு பெண்ணையும் சத்தீஸ்கர் மாநிலக் காவல்துறை கைது செய்தது.
ஒன்பது நாட்களாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்குப் பிணை வழங்கக் கோரிச் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.மதம் மாற்றுக் குற்றச்சாட்டுச் சுமத்தியோர் மீது ஆட்கடத்தல் பிரிவில் வழக்குப் பதிந்தது செல்லாது எனக் கூறி வாதிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வெளிநாட்டுக்குச் செல்லக் கூடாது, ஆளுக்கு ஐந்து இலட்சம் ரூபாய் பிணையப் பத்திரம் கொடுக்க வேண்டும் என்கிற நிபந்தனைகளுடன் இருவரையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளதாக வழக்கறிஞர் கோபக்குமார் தெரிவித்தார்.
கன்னிமார் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டதற்குக் கேரளச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கேரளக் கன்னிமார்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதற்குக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜேபி மாதர் வரவேற்புத் தெரிவித்துள்ளார். பாஜக, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தளம் ஆகியவற்றின் உண்மை முகங்களை இந்த வழக்கின் மூலம் உலகம் அறிந்துகொண்டதாக அவர் தெரிவித்தார்.


