
நடிப்புக்கு உகந்த முகம் இல்லாத உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களிடம் நடித்து எல்லாத் தரப்பு மக்களையும் ஏமாற்றி வருவதாகவும், இதற்கு முன்னால் திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சரால் திமுக அரசே காணாமல் போனது, அதேபோல் உதயநிதி நடிப்பால் இவ்வரசு காணாமல் போகும் என அதிமுகமுன்னாள் அமைச்சர் என் ஆர் சிவபதி கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இளைஞரணி சார்பில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மண்டிதெரு பகுதியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆனந்தன் தலைமையில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சருமான வி சோமசுந்தரம் முன்னிலையில் முன்னால் அமைச்சர் என் ஆர் சிவபதி, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தாலிக்கு தங்கம், அம்மா உணவகம், பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா பொருட்கள் எனச் செயல்படுத்திய பல்வேறு திட்டங்களை விளக்கி எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.
மேலும் மூன்று ஆண்டுகளாகப் பதவி வகித்து வரும் திமுக அரசு மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசித் தற்போது வரை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது.திருமணப் பெண்களுக்கான தாலிக்கு தங்கம் திட்டம், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் விலையில்லா லேப்டாப் திட்டம் போன்றவற்றை தடுத்து நிறுத்தியது மட்டுமல்லாமல் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் திட்டம், அரசு ஊழியர்கள் எனப் பல தரப்பினரையும் ஏமாற்றி ஆட்சி செய்து வருகிறது எனவும் இதை மாற்றிக் கொள்ளும் வகையில் தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிராக வாக்களித்து அதிமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் கூட்டத்தில் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில் சினிமா நடிப்பதற்கு உகந்த முகம் இல்லாத உதயநிதி ஸ்டாலின் மக்கள் மத்தியில் பல்வேறு வாக்குறுதிகளைக் கூறி நடித்து ஏமாற்றிவிட்டு அவற்றை இன்றளவும் நிறைவேற்றாத விடியா அரசைக் கொண்டு அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றும் இவ்வரசு ஏற்கனவே திமுக ஆட்சி காலத்தில் மின்சாரத்துறை அமைச்சரால் மக்களுக்குப் பல்வேறு இன்னல்களை ஏற்படுத்திய நிலையில் திமுக அரசு காணாமல் போனது அவை போலவே உதயநிதி ஸ்டாலின் நடிப்பால் விரைவில் திமுக காணாமல் போகும் என முன்னாள் அமைச்சர் என் ஆர் சிவபதி பொதுமக்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


