
என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை வாங்கத் தமிழ்நாடு அரசு முயல வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ளார். அதில், கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் மூன்று சதவீதப் பங்குகளை, பங்குச் சந்தை மூலம் தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கடந்த 2006ஆம் ஆண்டு என்.எல்.சி. நிறுவனத்தின் 10 சதவீதப் பங்குகளை விற்பனை செய்ய அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு முயற்சித்தபோது, அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது என்று கூறியுள்ளார்.
தமிழக அரசு தான் நிறுவனத்தை நடத்தும் என்ற நம்பிக்கையோடு அப்பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து தங்களது நிலங்களை வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். என்.எல்.சி. பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு விற்பதைத் தடுக்க உடனடி நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசே பங்குகளை வாங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதன்மூலம் என்.எல்.சி. தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் நலன் காக்கப்படுவதுடன், அப்பகுதி மக்களின் எதிர்காலமும் காக்கப்படும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்..




