சட்டசபையில் பேசிய தனது பேச்சு சர்ச்சையான நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மன்னிப்பு கோரியுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், எனது பேச்சுக்கு மன்னிப்பு கோருகிறேன், எனது வார்த்தைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். எனது கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால், கைகூப்பி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யாரையும் புண்படுத்தும் நோக்கில் அந்த கருத்தை நான் கூறவில்லை. எனது வார்த்தைகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
எனது வார்த்தைகள் மக்களை புண்படுத்தியிருந்தால் எனது வார்த்தைகளை திரும்பப் பெறுகிறேன். யாரையும் புண்படுத்துவது என் நோக்கம் அல்ல. கருவுறுதல் விகிதம் குறைவதைப் பற்றி விளக்கவே நான் முயற்சித்தேன். நான் எப்போதும் பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைத்து வருகிறேன். நான் பெண்களை மிகவும் மதிக்கிறேன். எனது பேச்சு தவறான முறையில் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது” என நிதிஷ்குமார் விளக்கமளித்துள்ளார்.
பீகார் சட்டப்பேரவையில் நேற்று பேசிய நிதிஷ்குமார், “பீகாரில் பெண் கல்வி உயர்ந்துள்ளது. இது மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதிலும் உதவிகரமாக உள்ளது. ஒரு படித்த பெண் திருமணம் செய்துகொள்ளும்போது, கருவுறுதலை தடுப்பதற்கான வழிமுறகளை கணவருக்கு கற்று கொடுக்க முடியும். இது மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது” என கூறினார். இதோடு, கணவன் – மனைவி இடையேயான சில அந்தரங்க விவகாரங்களையும் பேசினார்.
கணவன் – மனைவி இடையேயான அந்தரங்க விவகாரங்கள் தொடர்பாக சட்டப்பேரவையிலேயே, சைகைகளுடன் முதலமைச்சர் பேசியதற்கு அவையில் இருந்த பெண் உறுப்பினர்கள் அப்போதே ஆட்சேபனை தெரிவித்தனர். ”இந்திய அரசியல் வரலாற்றில், நிதிஷ் குமார் போன்ற அநாகரீகமான தலைவர் யாரும் இல்லை” என, பீகார் பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது.
நிதிஷ் குமார் மன்னிப்புக் கோர வேண்டும் என, தேசிய மகளிர் ஆணையமும் வலியுறுதியது. சமூக வலைதளங்களிலும் நிதிஷ்குமாரின் பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்தன. இந்நிலையில், சட்டப்பேரவையில் தான் பேசிய வார்த்தைகளை திரும்பப் பெறுவதகாவும், யாரையேனும் புண்படுத்தி இருந்தல் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும்” நிதிஷ்குமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
#WATCH | Bihar CM Nitish Kumar says, “I apologise & I take back my words…” pic.twitter.com/wRIB1KAI8O
— ANI (@ANI) November 8, 2023