சென்னை:
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களிடமிருந்து 242 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை நகரம் முழுவதும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு, பைக்குகளை பறிமுதல் செய்துள்ளனர்.
ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நள்ளிரவில் இளைஞர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். நள்ளிரவு கொண்டாட்டங்களில் அத்துமீறல்கள் ஏற்படுவதை தடுக்க, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சென்னையில் 19 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்கள், இருசக்கர வாகனங்களில் 2-க்கும் மேற்பட்ட நபர்களாகச் செல்பவர்கள் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களை தடுக்கும் விதமாக, சென்னை முழுவதும் 425 இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
விதி மீறலில் ஈடுபடுபவர்களின் பைக்குகள் பறிமுதல் செய்யப்படும். அதே போன்று சாலையில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் வீலிங் செய்வது, அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் செல்வது, பொது இடங்களில் நின்று மது அருந்திவிட்டு பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், குடிபோதையில் வாகனத்தை இயக்குபவர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள்மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பைக் ரேஸில் ஈடுபட்டவர்களின் 242 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளதாகக் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னை நகரம் முழுவதும் நேற்று நடந்த வாகன தணிக்கையில் அதிவேகமாக வாகனங்கள் ஓட்டியது, குடிபோதையில் வாகனங்கள் ஓட்டியவர்களிடமிருந்து இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.
242 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அபராதம் விதிக்காமல், எச்சரித்து, உரியவர்களிடமே வாகங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.


