செந்தில் பாலாஜி வழக்கு இன்று விசாரணை..! ஜாமினா..? ஜெயிலா..?

Advertisements

தமிழக அரசியல் களம் தற்போது ஒரு பெரும் அரசியல் சூழ்ச்சியின் மையப்புள்ளியாக மாறியுள்ளது. ஆளும் அரசுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரும் நோக்கத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ-வை விலை பேச முயன்ற சம்பவம், ஜனநாயகத்தின் மாண்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. ரூ.35 கோடி பேரமும், அதைத் தொடர்ந்து நடந்த மிரட்டல்களும் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இந்த வழக்கு உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. இந்தச் சதியின் பின்னணியில் யார் இருக்கிறார்கள், அதிகார மையங்களின் ஆட்டம் என்ன, மற்றும் உயர்நீதிமன்றத்தில் இன்று நடக்கவிருக்கும் சட்டப் போர் தமிழக அரசியலில் என்ன மாதிரியான மாற்றங்களை உருவாக்கும் என்பது குறித்த விரிவாக பார்க்கலாம்.!

தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள இந்த ரூ.35 கோடி பேரம் பேசும் விவகாரம், மாநிலத்தின் தற்போதைய அரசியல் சூழலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ டாக்டர் என். இளையராஜா, சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு விஸ்வரூபம் எடுத்தது. சட்டப்பேரவையில் ஆளும் அரசுக்கு எதிராக சபாநாயகருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரத் தனக்கு ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், அதைப் பெற மறுத்தபோது தங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அவர் அளித்த புகார், மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் திருவல்லிக்கேணி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இதுவரை இந்தச் சதியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஐ.பி.டி.எஸ் என்ற கருத்துக்கணிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் திருநாவுக்கரசு உள்ளிட்ட நபர்கள் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் திட்டத்தின் பின்னணியில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் நேரடித் தலையீடு இருப்பதாகப் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. தமிழக அரசுக்கு எதிராகச் செயல்பட சுமார் ரூ.180 கோடி வரை ஒதுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாரால் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்டவர்களுக்கும் செந்தில் பாலாஜியின் கரூர் நிறுவனங்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் வழக்கை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளன.

இந்தச் சூழலில், போலீசார் தங்களைக் கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர். எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்புப் பிரிவு நீதிபதி ஜெ. இளந்திரையன் அவர்களின் அமர்வுக்கு இந்த மனுக்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், இன்று பிற்பகல் 3:30 மணிக்கு இந்த முன்ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வரவுள்ளன.

இந்த வழக்கில் அரசுத் தரப்பு முன்வைக்கப்போகும் வாதங்களும், உயர்நீதிமன்றம் வழங்கப்போகும் உத்தரவும் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜியின் பங்கு குறித்த ஆதாரங்களைச் சட்டபூர்வமாக நிரூபிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வரும் வேளையில், தவெக எம்.எல்.ஏ-வை மிரட்டியவர்கள் யார் என்பது குறித்த கூடுதல் தகவல்கள் நீதிமன்ற விசாரணையில் வெளிவரும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில் , இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள முன்ஜாமீன் மனு மீதான விசாரணை, செந்தில் பாலாஜி தரப்புக்குத் சாதகமாக அமையுமா அல்லது வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அரசுத் தரப்பு வலுவான ஆதாரங்களை முன்வைக்குமா என்பதுதான் ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. மேலும் , எம்.எல்.ஏ-க்களை விலை பேசும் அரசியல் கலாச்சாரத்திற்கு இந்த வழக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்குமா அல்லது இது புதிய அரசியல் விவாதங்களுக்கு வழிவகுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *