25 கோடி மக்கள் வறுமைக்கோட்டிலிருந்து விடுதலை – திரௌபதி முர்மு.!

Advertisements

கடந்த பத்தாண்டுகளில் 25 கோடிப் பேர் வறுமைக்கோட்டை விட்டு மீண்டுள்ளதாகவும், இந்த ஆட்சிக்காலத்தில் ஏழைகளுக்கு மேலும் அதிகாரமளித்து அவர்களை முன்னேற்றத் திட்டமிட்டுள்ளதாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் உரையாற்றக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புறப்பட்டு வந்தார்.

குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் வந்த அவரைக் குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான இராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் வரவேற்றனர். நாடாளுமன்ற முற்றத்தில் குடியரசுத் தலைவருக்கு மரபுப்படி இசைமுழக்கத்துடன் மரியாதை அளிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். அப்போது, வந்தே மாதரம் பாட்டின் 150ஆம் ஆண்டும், குரு தேஜ் பகதூரின் 350ஆவது தியாக நாளும், பிர்சா முண்டாவின் 150ஆவது பிறந்த நாளும் வந்துள்ளதை நினைவுகூர்ந்தார்.

வல்லப் பாய் பட்டேலின் 150ஆம் ஆண்டு பிறந்த நாள் ஒரே நாடு வலிமையான நாடு என்கிற உணர்வை மேலும் வலுப்படுத்தும் என்று கூறினார்.
இருபத்தோராம் நூற்றாண்டின் இரண்டாம் கால்பகுதியில் தொடங்கியுள்ளதாகவும், கடந்த பதினோராண்டுகளில் இந்தியா பல துறைகளிலும் தனது அடித்தளத்தை வலுப்படுத்தியுள்ளதாகக் கூறினார்.

சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றின் மீதே அரசியலமைப்புச் சட்டத்தை அம்பேத்கர் கட்டமைத்துள்ளதாகக் கூறிய அவர், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எந்தப் பாகுபாடுமின்றி முழு உரிமைகளையும் பெற வேண்டும் என்று தெரிவித்தார். உண்மையான சமூக நீதியை நிலைநாட்டத் தமது அரசு கடமைப்பட்டுள்ளதாகவும், இதனால் கடந்த பத்தாண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமைக்கோட்டைவிட்டு வெளியே வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

மூன்றாவது ஆட்சிக்காலத்தில் ஏழைகளுக்கு மேலும் அதிகாரம் அளித்து அவர்களை அதிவேகத்தில் முன்னேற்ற வேண்டும் என்று செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். நாட்டின் 126 மாவட்டங்களில் மாவோயிச, நக்சலிசப் பாதிப்பு இருந்ததாகவும், கடந்த 11 ஆண்டுகளில் தொடர்ச்சியான செயல்பாடுகளால் இது முற்றிலும் துடைத்தெறியப்பட்டதாகவும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.

தற்சார்பு வாழ்க்கை அமையும் வரை சுதந்திரம் முழுமையடையாது என்று ரவீந்திரநாத் தாகூர் கூறியதை நினைவுகூர்ந்த குடியரசுத் தலைவர், தற்சார்பு இந்தியா என்னும் இலக்குடன் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் உலகச் சந்தைகளில் விற்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *